“உங்களில் யாரேனும் ஒருவருக்கு அவரின் பணியாளர் உணவு தயாரித்துக் கொண்டு வந்து உண்பதற்கு கொடுத்தால் அவரையும் உங்களுடன் அமரச் செய்து சாப்பிட வைக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இல்லை எனில் குறைந்த பட்சம் ஒரிருகவளமாவது அவரது தட்டில் வைத்து உண்ணச் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த உணவை தயாரிப்பதற்காக அவர் தான் நெருப்பின் சூட்டில் வெப்பத்தில் கஷ்டப்பட்டார்.” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பு : அபூஹுரைரா (رضي الله عنه) பதிவு : ஸஹிஹ் முஸ்லிம்).
மனித உரிமைகள் மற்றும் தொழிலாளரின் உரிமைகள் கடமைகள் பற்றி ஆரவாரத்துடன் முழங்கப்படும் இந்த நவ யுகத்திலும் யார் முதலில் சாப்பிட வேண்டும் என்ற இது போன்ற ஒரு அழகிய பிரகடனம் எங்காவது கூறப்பட்டிருக்கின்றதா உண்பதை தயவு செய்து சற்று எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்காக சமையல் செய்து உணவு தயாரிப்பவர் உங்கள் பணியாளராகவோ அல்லது உங்கள் மனைவியாகவோ இருக்கலாம். இங்கே நபி (ﷺ) அவர்கள் குறிப்பிடுவது உங்களது வாழ்க்கைத் துணைவியாக, உங்களது வாழ்கையுடன் ஒன்றிவிட்ட மனைவியைப் பற்றியல்ல.
தன் வேலைக்கு சம்பளம் பெறுவதைத் தவிர வேறு எவ்வித உரிமையும் பெறாத எந்த நேரமும், எந்த வேலை ஆயினும் கூப்பிட்டவுடன் ஓடி வரவேண்டிய வேலைக்கார ஊழியர்களைப் பற்றியே இங்கே குறிப்பிடுகின்றார்கள்.
சமையல்காரன் சமைத்துப் போடுவது அவனது கடமை அதற்காக அவன் சம்பளம் ஊதியம் வாங்குகின்றான் அவ்வளவு தான். அவனுக்கும் உணவு கொடுக்க வேண்டுமா? என்ன? அவசியமே இல்லை” எனக் கூறுவோரும் “போனால் போகின்றது ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் ஆனால் அதற்காக நம்முடன் ஒன்றாக அமர்ந்தால் எமது மரியாதை செல்வாக்கு என்னாகும்?” எனக் கூறுபவர்களும் தான் உலகில் அதிகம் இருக்கின்றனர்.
ஆனால் இங்கே நபி (ﷺ) அவர்கள் கூறும் அற்புதமான சமதர்மத்தையும், சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இது போன்ற மகத்தான தத்துவங்கள் ஓர் இறைத் தூதரிடமிருந்தேயன்றி வெளிவருவதற்கு வாய்ப்பில்லை என்பதை எவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
அன்றைய கால அடிமைகள் :
பணியாளர் என்று நபி (ﷺ) அவர்கள் இங்கு குறிப்பிடுவது இன்றைய காலத்தில் உள்ளது போன்ற பணியாளர்களையல்ல, உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா உரிமைகளையும் பெற்ற அடிமைகள் பற்றியதாகும்.
ஏனெனில் அக்காலத்தில் வேலைக்காரர்களாக இருந்தவர்கள் யாவரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள் தாம். அவர்களுக்கு என்று எவ்வித உரிமையுகளும் கிடையாது சம்பளம், ஊதியம் எதுவும் கிடையாது ஒரு பைசாவைக் கூட தன் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையோ, சேமிக்கவோ அல்லது தன் விருப்பப் படி செலவிடவோ எவ்வித அனுமதியும் வழங்கப்படாது. அத்தகைய கற்காலத்தில் தான் தமது வேலைக்காரனை, அடிமையை ஒன்றாக வைத்து சாப்பிடுமாறு நபி (ﷺ) அவர்கள் கூறுகின்றார்கள்.
நெருப்பிற்கு முன் நின்றது நீயா? :
அதற்கு அவர்கள் கூறும் காரணத்தைக் கவனித்தீர்களா? உணவை தயாரிப்பதற்கான நெருப்பைப்பற்ற வைத்ததிலிருந்து தேவையானதை அரைத்து, ஆட்டுவதை ஆட்டி இடிப்பதற்கு தேவையானதை இடித்து அடேங்ப்பா எத்தனை எத்தனை கஷ்டங்கள்..
நெருப்பின் வெப்பத்திற்கு அருகிலேயே நீண்ட நேரம் நின்று.. ஒவ்வொன்றாக கவனத்துடன் செயல்பட்டு தயாரித்ததால் தானே உங்களுக்கு முன்னால் அந்த உணவு வந்தது? அவன் பட்ட கஷ்டத்திற்கும் துயரத்திற்கும் நீங்கள் கொடுக்கின்ற சில ஆயிரம் ரூபாய்கள் கூலி நன்றியாகுமா?
அவன் பட்ட கஷ்டம் அவனது உடலையும் உள்ளத்தையும் தீயாய் வாட்டி எடுத்திருக்கும் அந்த நேரத்தில் அவனையும் உங்களுடன் அமரச் செய்து அவன் தயாரித்த உணவை முதன் முதலில் அவனையே சுவைத்துச் சாப்பிடச் சொன்னால் அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான்? காலமெல்லாம் இவருக்கா உழைக்க வேண்டும் என்று எண்ண மாட்டானா?
அந்த மகிழ்ச்சியை ஏன் அந்த பணியாளனுக்கு வழங்கக்கூடாது. தான் சமைத்த அந்த உணவில் ஏதும் குறைகள் இருப்பின் உடனே அவன் அதை சரிசெய்து விடுவானல்லவா?
நம் வீட்டில் நடப்பது என்ன?
இத்தகைய உயரிய தத்துவத்தை இன்று கடைபிடிப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை நாம் எண்ணிப் பார்பதற்கு முன்னர் நம்முடைய வீடுகளில் நமக்கு அன்றாடம் சமைத்துப் போடும் நம் மனைவியுடனாவது இந்தப் பண்பாட்டை நாம் கடைப்பிடிக்கின்றோமா என்பதைக் கொஞ்சம் எடைபோடுங்கள்.
கரண்டி பிடிப்பது யார்? :
பெரும்பாலான குடும்பங்களில் வீட்டில் உள்ள வயதானவர் முதல் குழந்தை வரை அத்தனை பேரும் வயிறார சாப்பிட்ட பின்னர் கடைசியில் ஏதாவது மிச்சம் மீதியிருந்தால் தான் சமையல் செய்தவர் உண்ண வேண்டும்.
அதுவும் வீட்டுக்குப் புதிதாக வந்த “மருமகள்” விடயத்தில் மாமியார்களுக்கு என்றால ரொம்ப தாராள மனசுதான். சோற்றையும் கறியையும் சுடச்சுட சமைத்துப் போட்ட மருமகள், மிஞ்சிய எலும்பைக் கூட ருசிபார்க்க முடியாது சமையல் செய்த கையோடு அவள் பாத்திரங்களைக் சுத்தம் செய்ய போய்விட வேண்டும்.
குடும்பத் தலைவி பதவியில் வீட்டிருக்கும் மாமியார் சமைக்க ஆரம்பித்தால் குடும்பத்தில் உள்ளோருக்கு மட்டுமின்றி மூன்றாவது, நான்காவது தெருவில் உள்ள தன் பெண் பிள்ளைகளின் வீட்டுக்கு கறியை அனுப்பி விட்டு, கடைசியில் வெற்றுப் பானையைக் காட்டி “கறி எல்லாம் இன்றைக்குத் தீர்ந்து போய்விட்டது.
அதற்கென்ன? அடுத்த வாரம் நாம் சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இன்றைக்கு நீ ஊறுகாயையும், ரசத்தையும் வைத்து வயிறாரச் சாப்பிட்டுக் கொள்” என்று தாராள மனதுடன் “தானம்” செய்கின்ற மாமியார்களும் நிச்சயம் உண்டு.
தனிக்குடித்தனம் ஏன்? :
திருமணம் முடிக்கும் வரையில் தன் தாய் வீட்டில் அடுப்படியில் கறி வேகும் பொழுதே முதல் ஆளாக சென்று உணவை எடுத்துச் சாப்பிட்ட செல்லப் பிள்ளையான அவள் தனது மாமியார் வீட்டில் தன் கையால் சமைத்துப் போட்ட உணவை முகர்ந்து பார்ப்பதைத் தவிர வேறு எந்த வழியில்லாத நிலையில் உள்ளம் வெதும்பிக் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தனிக்குடித்தனம் போவதற்கு அவள் திட்டம் போடாமல் வேறு என்ன செய்வாள்?
இனி என்ன? :
“நீ உணவு உண்ணும் பொழுது அவளைச் உண்ணச் செய்வதும் நீ ஆடை எடுக்கும் பொழுது அவளுக்கும் ஆடை எடுத்துக் கொடுப்பதும் உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளாகும்” என்று கூறிய நபி (ﷺ) அவர்கள், உனது மனைவியின் வாயில் நீ ஊட்டி விடும் உணவிற்காக இறைவனிடம் நீ நற்கூலி பெறுவாய்” என்றும் உணர்தி கணவன் உணவு சாப்பிடும் பொழுதே மனைவியையும் தன்னுடன் அமரச் செய்து அவர்களுக்கு உணவை ஊட்டியும் விட வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
ம்ம்ம் சரி…சரி..! இனிமேலாவது குறைந்தபட்சம் நாம் உணவு உண்னும் பொழுது எம் மனைவியையும் எம்முடன் சாப்பிட வருமாறு கூறுவதற்கு முன் வருவோமா?
மவ்லவி, S. லியாகத் அலி மன்பஈ