சீனி வரி மோசடி என்றால் என்ன?

மோசடி
இலங்கையில் இடம்பெற்ற சீனி வரி மோசடி
இலங்கை சுங்கத் தரவுகளின்படி, இலங்கை வருடாந்தம் 550,000 முதல் 650,000 மெட்ரிக் டன் சீனியை இறக்குமதி செய்கின்றது. அதன்படி, மாதத்திற்கு சராசரியாக 45,000 முதல் 55,000 மெட்ரிக் டன் வரை சீனி இறக்குமதி செய்யப்படுகின்றது.

2020 ஜூன் மாதம், வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 50 ரூபாவால் சிறப்பு சரக்கு வரி விதிக்கப்பட்டது. அந்த வரித் தொகையானது அக்டோபர் 14 அன்று வெறும் .25 சதத்திற்கு குறைக்கப்பட்டது. இதன் படி வரி வரி தொகை குறைப்பு ரூ. 49.75 ஆகும்.

அத்துடன் அரசாங்கம் ஒரு கிலோ சீனியின் விலை 85 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று வர்தமானி மூலம் அறிவித்த போதிலும். அரசுக்கு தலா 50 ரூபா வரி செலுத்தி சீனியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் அந்த விலைக்கு சீனியை விற்பனை செய்ய முடியாது என்று கூறினார்கள்.

அத்துடன் வெறும் .25 சதம் வரி செலுத்தி சீனியை இறக்குமதி செய்த வர்தகர்களும் சீனியை 85- ரூபாவிற்க்கு விற்பனை செய்யவில்லை. எவ்வாறாயினும் சந்தையில் அரசாங்க அறிவித்தலின் படி 85 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட வில்லை.

இதற்கிடையில், அக்டோபர் 27 அன்று, அரசாங்கம் மீண்டும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான வரியை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், இறக்குமதி சட்டங்களின்படி, அக்டோபர் 14 முதல் நடைமுறைக்கு வந்த வரி குறைப்பை ஒரு மாத காலத்திற்கு மாற்ற முடியாமல் போனது.

இதன் காரணமாக 25 சத வரி தீர்வையின் போது சீனிக்கான மற்றும் இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் ஊடாக உரிம முறைமையின் கீழ் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனியை மீளப்பெற முடிந்தது. அதன்படி, ஒக்டோபர் 27 முதல் நவம்பர் 22 வரை இறக்குமதி செய்யப்பட்ட சீனி 25 சத இறக்குமதி வரிக்கு உட்பட்டு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற நிதிக் குழுவுக்கு நிதி அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இறக்குமதி வரி உட்பட இந்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் சராசரி விலை ரூ. 84.50 ஆகும். அவர்கள் சந்தையில் சீனியை விற்பனை செய்த சராசரி விலை ரூ.118.13 ஆகும். எனவே அவர்கள் இதன் மூலம் ஈட்டிய ஒரு கிலோவிற்கான லாபம் 44 ரூபா. இது இறக்குமதி மொத்த வர்த்தகத்தில் பெரும் லாபமாகும்.

இங்கு உடனடியாக களத்தில் இறங்கி சீனியை ஆர்டர் செய்த நிறுவனம் பிரமிட் வில்மா நிறுவனமாகும். இந்நிறுவனம் நவம்பர் 2ஆம் திகதி 26,000 மெட்ரிக் டன் சீனியை இறக்குமதி செய்தது. நவம்பர் 25 ஆம் திகதி மேலும் 37,000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந் நிறுவனம் மாத்திரம் எவ்வளவு இலாபத்தை ஈட்டியிருப்பார்கள்?

குறைக்கப்பட்ட வரி சலுகையின் மூலம் சீனியின் விலை குறைக்கப்படவில்லை, மாறாக சீன் இறக்குமதி நிறுவனங்கள் பாரிய இலாபத்தை ஈட்டிக் கொண்டனர். இதில் பெரும் இலாபத்தை ஈட்டிய பிரமிட் வில்மா நிறுவனத்தின் உரிமையாளர் சஜாத் மவ்சூத் என்பவர் கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இறக்குமதி சீனி சந்தையானது ஒரு சில இறக்குமதியாளர்களால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சந்தையாகும்.

இலங்கையின் பிரதான சீனி இறக்குமதி நிறுவனங்களில் ஒன்றான பிரமிட் வில்மா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் வரி விகிதத்தை மாற்றியமைக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னர், இலங்கைக்கு அதிகளவிலான சீனியை இறக்குமதி செய்து, வரி செலுத்தாமல் (Bonded warehouse) கிடங்கில் சேமித்து வைத்திருந்து சீனிக்கான வரி 25 சதத்தினால் குறைக்கபட்டதாக அறிவிப்பு வௌியானவுடன் குறித்த சீனியை சந்தைக்கு வௌியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில், இந்த வரிக் குறைப்பைப் பயன்படுத்தி பிரமிட் வில்மா நிறுவனம் இறக்குமதி செய்த மொத்த சீனியின் அளவு 125,000 மெட்ரிக் டன் ஆகும். 2020 ஒக்டோபர் முதல் 2021 பெப்ரவரி வரை இறக்குமதி செய்யப்பட்ட மொத்த சீனியில் 39% பிரமிட் வில்மா நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புடைய காலகட்டத்தில் பிரமிட் வில்மா நிறுவனம் சீனி இறக்குமதியை (1222%) வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதனால் திறைசேரிக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 15.9 பில்லியன் ரூபா என அப்போதைய அரசாங்க கணக்காய்வுக் குழு சுட்டிக்காட்டியது.

இதேவேளை, அரச நிறுவனமான சதொச நிறுவனம், 25 சதத்திற்கு சீனியை இறக்குமதி செய்த குறித்த நிறுவனத்திடமிருந்து 2000 மெற்றிக் டன்களுக்கும் அதிகமான சீனியை கிலோ ஒன்றுக்கு 125-127 ரூபா என்ற விலையில் கொள்வனவு செய்திருந்தது.

இவ்வாறு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட சீனியை சதொச நிறுவனம் நுகர்வோருக்கு 85 ரூபா விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் சதொச நிறுவனத்திற்கு சுமார் 75 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு பயனளிக்கும் வகையில் இறக்குமதி வரிகள் மற்றும் விலைகள் தொடர்பான திடீர் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடப்பட்டு இந்த ஊழல் மோசடி நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மோசடியின் மூலம் நாட்டின் பொருளாதாரமும், மக்கள் நலனும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அரச பணமும், மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய இதர நலத் திட்டங்களும் இங்கு இழக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட ஒரு சில இறக்குமதியாளர்களின் நியாயமற்ற நடவடிக்கையினால் மற்ற சீனி இறக்குமதியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியினால் அரசாங்கம் மாதாந்தம் 2 பில்லியன் ரூபா பாரிய நட்டத்தை 37 மாதங்களுக்கு மேல் சுமக்க வேண்டியிருந்தது. பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள அரச வருமானத்தை உயர்த்த நாட்டு மக்களின் நுகர்வு மற்றும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிகளை அதிகரித்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சித்த குறிப்பிட்ட காலப்பகுதியில் சீனி வரியை மாற்றுவதற்கும் குறித்த மோசடி தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் 15.9 பில்லியன் ரூபா வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல ஆகியோர் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்தனர்.

அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், சட்டமா அதிபர், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகல, சதொச முன்னாள் தலைவர் நுஷாத் பெரேரா, பிரமிட் வில்மா நிறுவனம், அதன் தலைவர் சஜாத் மௌசூன், நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply