மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்றால் என்ன?

Question man, வங்கி
பிணைமுறி என்பது அரசுக்கு கடன் பெற்றுக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். அரசிற்கு நிதி தேவைப்படுகின்றபோது, அரசு மத்திய வங்கியினூடாக பிணைமுறி ஏலம் வெளியிடப்படுகின்றது. அதாவது அரசாங்கத்தின் சார்பாக மத்திய வங்கி இந்த கடனை பெறுகிறது. இதை ஒரு நிலையான, நிரந்தர வைப்புச் சான்றிதழொன்று என நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பத்திரம் என்பது அரசாங்கத்தால் வாங்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாக்குறுதிக் கடிதமாகும். அவற்றை சாதாரண மக்களைப் போன்றே ஏனைய வங்கிகளும் கொள்வனவு செய்யமுடியும். அதற்கு வட்டி கொடுக்கப்படும். எனவே இந்த பத்திரங்களை வாங்கும் மக்கள் அல்லது வங்கிகளுக்கு ஒரு முதலீட்டு வழியாகும்.

ஒருவேளை நீங்கள் இப்படி நினைக்கலாம். வங்கிகள் ஏன் இந்த பத்திரங்களை வாங்குகின்றன? என்று. வங்கிகள் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் சேமிப்பு பணத்தை கடனாகக் கொடுத்து லாபம் ஈட்டுகிறார்கள்.

எனவே அவர்கள் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மக்கள் வைப்பிலிட்ட சேமிப்பு பணத்தை கடனாகக் கொடுக்கிறார்கள். அவ்வாறு கடன் கொடுத்த பின்னரும் தமது கையிருப்பில் மேலதிகமாக பணம் மீதமிருந்தால் அதனை வங்கிப் பெட்டகத்தில் வைத்திருப்பதில் எவ்வித இலாபமும் கிடைக்கப் போவதில்லை.

அதனால் அப்பணத்தை பிணைமுறிப் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். பத்திரங்கள் நீண்ட கால முதிர்வு கொண்டவை. கருவூல உண்டியல்கள் ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வு கொண்டவை.

இனி x என்ற நபர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு பத்திரத்தை வாங்கினார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு அவருக்கு மத்திய வங்கியினால் ஒரு சான்றிதல் வழங்கப்படும். அதன் காலம் ஒரு வருடம் எனின் மத்திய வங்கி அந்த ஆண்டின் இறுதியில் அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொள்கிறது.

இங்கு தன் பணத்தை அரசாங்கத்திற்கு கொடுப்பதால் அரசாங்கம் அப்பணத்தை புதிதாக அச்சடித்தாவது திருப்பி கொடுப்பார்கள் என்பது பொதுமக்களுக்கு தெரியும். எனவே பத்திரங்களில் முதலீடு செய்வது குறைந்த ஆபத்தான முதலீட்டு வழியாகும். அதனால்தான் நிறைய பேர் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள்.

இப்போது x என்ற நபரிடம் பத்திர சான்றிதழ் ஒன்று உள்ளது. இதன் முக மதிப்பு ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்திரங்களின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்து, இரண்டாம் நிலை சந்தையில் விற்கப்படும் போது விலை முக மதிப்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

இதனை இவ்வாறு விளங்கிக் கொள்வோம், ஒரு சாதாரண அளவு தேங்காய் ஒன்று 50 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். வழக்கத்திற்கு மாறாக தேங்காய்களுக்கான தேவை அதிமாக காணப்படும் ஒரு நாளில் அத் தேங்காயின் விலை 60 அல்லது 70 ரூபாவாகவும் இருக்கலாம். அதே போல் அது 30 அல்லது 40 ஆகவும் இருக்கலாம்.

வழக்கமாக இந்த பத்திரங்களை மத்திய வங்கி ஏலத்தில் விற்கிறது. இந்த ஏலம் 100% சுயாதீனமானது. இந்த ஏலத்திற்கு செல்வதற்கு மத்திய வங்கியின் ஆளுநருக்கு அனுமதியிவில்லை.

ஏனெனில் மத்திய வங்கி ஆளுநர் என்பவர் எப்போதும் ஒரு அரசியல் நியமனமாக காணப்படுவதாகும். அதற்கு பதிலாக, ஏலம் ஒரு துணை ஆளுநரால் நடத்தப்படுகின்றது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயம் என்பதால் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையாக கையாளப்படும் விடயமாகும், அத்துடன் இதில் யாருக்கும் கை வைக்க முடியாது.

இப்போது தான் சம்பவம் ஆரம்பிக்கின்றது!!
கதாநாயகன் அர்ஜுன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் தலைவராக வருகின்றார். அவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். இலங்கையின் நாணயத் தாள்களில் கையெழுத்திடுவது நிதியமைச்சரும் மத்திய வங்கி ஆளுநரும் ஆவார்கள்.

எனவே இலங்கையின் ரூபாய் நோட்டுகளில் சிங்கப்பூர் குடிமகன் ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். அதற்கு தகுதியானவர்கள் நம் நாட்டில் யாரும் இல்லையா? இது ஒரு பெரிய பிரச்சனை.

மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வங்கிப் பத்திரங்களைக் கையாளும் இடைத்தரகர் நிறுவனங்களை நடாத்துவதற்கு எவ்வித அனுமதியுமில்லை. ஆனால் மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரனின் மகளை திருமணம் முடித்த நபருக்கு அதாவது அர்ஜுன் அலோசியஸ் என்பவருக்கு அவ்வாறான ஒரு இடைத்தரகர் நிறுவனம் இருக்கின்றது. அதன் பெயர் Perpetual Treasuries ஆகும். இங்கு தான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றது…

இந்த பிணை மோசடி விவகாரம் சற்று சிக்கலான விடயமாகும், எனவே இதனை எளிதாக புரிந்து கொள்வதற்காக ஒரு கூட்டுறவு சங்கம் ஒன்றின் அடிப்படையில் விளங்கிக் கொள்வோம்.

ஆம், அர்ஜுன் மகேந்திரன் என்பவர் மத்திய வங்கி எனும் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக காணப்படுகின்றார். கூட்டுறவு சங்கத்தின் பத்திரங்களாக தேங்காய்களை விற்பனை செய்வதாக கற்பனை செய்து கொள்வோம்.

அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அதாவது அர்ஜுன் அலோசியஸ் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். நான் முன்பே கூறியது போல், சாதாரண அளவிலான தேங்காயின் விலை சில காலங்களில் உயரும். சில காலங்களில் குறைகின்றது.

இப்போது இந்த பத்திரங்கள் எனும் தேங்காய்களின் விலை ரூ. 100 ஆக இருந்தாலும் அதன் விலை 120 ஆக அதிகரித்த காலம். எனவே நீங்கள் கூட்டுறவு சங்கத்தை நேசிக்கும் ஒரு தலைவராக இருந்தால், தேங்காயை 120 ரூபாய்க்கு விற்பதன் மூலம் கூட்டுறவு சங்கத்திற்கு லாபம் ஈட்டுவீர்கள்.

ஆனால் இங்கு அர்ஜுன் மகேந்திரன் 120 தேங்காயை பிணைமுறி ஏலம் எனும் தேங்காய் ஏலத்தில் 80 ரூபாவுக்கு தன் மருமகனுக்கு விற்குமாறு மத்திய வங்கியின் துணை ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கின்றார்.

அர்ஜுன் மகேந்திரனுக்கு ஏலம் நடாத்தப்படும் இடத்திற்கு வருவதற்கு அனுமதி இல்லாத போதும், அவர் அங்கு சென்று கடுமையான அழுத்தம் கொடுத்து ரூ.120 தேங்காயை 80 ரூபாவிற்கு தனது மருமகனுக்கு பெற்றுக் கொடுக்கின்றார்.

இவ்வாறு இலட்சக்கணக்கான தேங்காய்கள் கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படுகின்றன. இவ்வாறு 80 ரூபாய்க்கு பெற்றுக் கொண்ட தேங்காய்களை மருமகனால் 120 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

இப்போது ஒரு தேங்காய் மூலம் மருமகன் அலோசியஸிற்கு 40 ரூபாய் இலாம். இவ்வாறு மில்லியன் கணக்கிலான தேங்காய்கள் மூலம் அவர் பெற்றுக் கொள்ளும் இலாாம் பில்லியன் கணக்கில் வரும் என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டுமா.

4,000 ஊழியர்களையும் 200 கிளைகளையும் கொண்ட கொமர்ஷல் வங்கியின் மொத்த இலாபத்தை விட இந்த இலாபம் அதிகமானதாகும். இந்தளவு பாரிய இலாபத்தை ஈட்டிய அலோசியஸின் நிறுவனத்தில் சுமார் 20 ஊழியர்கள் மற்றும் ஒரு கிளை மட்டுமே உள்ளது. குறித்த நிறுவனத்தின் கட்டிடம் வெறும் 20 x 20 அடி கொண்ட ஒரு அறை. எவ்வளவு எளிதாக பாரியளவிலான லாபத்தை ஈட்டியுள்ளார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகின்றதா?

நீங்கள் தலைமை தாங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் ரூ.120 பெறுமதியுள்ள தேங்காயை உங்களின் உறவினருக்கு 80 ரூபாய்க்கு விற்பதால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படுமல்லவா. இப்போது நீங்கள் அடைந்த அந்த நஷ்டத்தை ஈடு செய்ய இலாபத்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அதற்கான மாற்று வழி என்ன?

உங்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒரு பால்மா பக்கட்டின் விலை 150 ரூபா என்றால் இப்போது அதனை 200 ரூபாவிற்க்கு விற்க வேண்டும். ஏன்? அந்த தேங்காய் மூலம் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும். அதே போல் கூட்டுறவு சங்கத்திற்கு பால்மா பக்கட்களை சப்ளை செய்யும் நபருக்கு முன்பு ஒரு பக்கட் பால்மாவிற்கு 130 ரூபா கொடுக்கப்பட்டது என்றால், இப்போது அதனை 110 ரூபாயாக குறைக்க வேண்டும்.

அதாவது 130 ரூபாவிற்கு வாங்கி 150 ரூபாவிற்கு விற்பனை செய்த பால்மா பக்கட்டினை இப்போது 110 ரூபாவிற்கு வாங்கி 200 ருபாவிற்கு விற்பனை செய்து தேங்காயினால் ஏற்பட்ட இழப்பை, நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். அதுதான் சிஸ்டம். எனவே இங்கு கூட்டுறவுச் சங்கங்கத்திற்கு பால்மா பக்கட்களை சப்ளை செய்பவறைப் போல் தான் பிணைமுறிப் பத்திரங்களில் பணம் போடுகிறவர்கள்.

அதாவது மக்களும் ஏனைய வங்கிகளும் மத்திய வங்கி பத்திரங்களுக்கு அதிக பணத்தை வழங்குகிறார்கள் அல்லவா அவ்வாறு அவர்கள் கொடுக்கும் பணத்திற்காக வழங்கப்படும் தொகை குறைக்கப்படும். அதாவது முன்னர் 130 ரூபா கொடுக்கப்பட்ட பால்மா பக்கட்டிற்கு தற்போது 110 ரூபாயாக குறைத்து கொடுப்பது போல்.

அதே போல் மத்திய வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் போது வசூலிக்கப்படும் வட்டியை அதிகரிக்க வேண்டும். அதாவது 150 ரூபாவிற்கு விற்பனை செய்த பால்மா பக்கட்டினை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்வது போல்.

மத்திய வங்கி இப்போது ஏனைய வங்கிகளுக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றது. அதிக வட்டியை செலுத்தி, வங்கிகளில் இருந்து வாங்கிய பணத்தைக் கொண்டு மக்களுக்கு கடன் கொடுக்கும் போது மக்களிடம் வசூலிக்கப்படும் வட்டியை அதிகரிக்க வேண்டும். இப்போது புரிகிறதா?

மத்திய வங்கியில் நடந்த இந்த மோசடியால், ஒரு சாமானிய மனிதன் ஒரு வங்கியில் கடன் வாங்கச் செல்லும்போது வசூலிக்கும் வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டி உள்ளது. அதாவது 150 ரூபாவிற்கு விற்பனை செய்த பால்மா பக்கட்டினை 200 ரூபாய்களுக்கு விற்பனை செய்வது போல்.
மேலும் நீங்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பில் வைக்கும் போது, உங்களுக்கு வழங்கப்பட்ட வட்டியை குறைக்க வேண்டும். அதாவது முன்னர் 130 ரூபா கொடுக்கப்பட்ட பால்மா பக்கட்டிற்கு தற்போது 110 ரூபாயாக குறைத்து கொடுப்பது போல்.

இப்போது கூட்டுறவு சங்கத்திற்கு பால்மா பக்கட் சப்ளை செய்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஏன்? ஒரு பக்கட் பால்மாவிற்கு 130 ரூபாய் தருகிறேன் என்று கூறி வாங்கிய பக்கட்ற்கு தற்போது கொடுப்பது 110 ரூபாய் மட்டுமே. மத்திய வங்கி பிணைமுறிகளில் முதலீடு செய்த ஊழியர் சேமலாப நிதியத்திற்கு இதுதான் நடந்ததுள்ளது. அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விட இப்போது குறைவாக செலுத்துகின்றார்கள்.

அதாவது, இதன் மூலம் இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு வட்டி குறையும். ஒரு சிங்கப்பூர் குடிமகனின் மருமகனுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் இலாபம் ஈட்டுவதற்கா சாதாரண உழைக்கும் மக்கள் பெற வேண்டிய வட்டிப் பணத்தை குறைக்க வேண்டும். மேலும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட வங்கிகளுக்கு தமது அவசர தேவைகளுக்காக கடன் வாங்க வரும் சாதாரண ஏழையின் கடனுக்கான வட்டியை அதிகரிக்க வேண்டும்.

சுருக்கமாக கூறினால், அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் பெற்ற பாரிய இலாபமான மத்திய வங்கியின் நஷ்டத்தை ஈடுகட்ட சாதாரண மக்களின் தலையில் சுமையை ஏற்றுகின்றனர். இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமென்றால் இன்னும் 7-8 வருடங்கள் இந்த வழியில் செல்ல வேண்டும்.

அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளிலும் கடன் பத்திரங்களில் பணம் உள்ளது. அவர்கள் அனைவரும் இப்போது நஷ்டத்தில் உள்ளனர். எனவே நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் வைப்புத்தொகையாளர்களுக்கு எவ்வாறு அதிக வட்டி செலுத்துகின்றன? மாறாக கடன் வட்டி அதிகரிக்கப்படாது.

சிலருக்கு பிணைமுறி வழக்கு பற்றிய எந்தப் புரிதலும் இல்லை, ஆனால் ஏதோ திருடப்பட்டுவிட்டது என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. அதுவும் பெரிய விடயம் தான்.

பெப்ரவரி 27, 2015 அன்று நடந்த ஏலத்தில் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட குறைந்தபட்ச இழப்பு ரூ .1,106.43 மில்லியனாகவும், அதிகபட்ச இழப்பு ரூ .1,114.63 மில்லியனாகவும் இருந்தது. முன்னதாக, கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் COP அறிக்கை ஆகியவை இந்த ஏலத்தில் அரசாங்கத்தால் ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டிருந்தன, எனவே இந்த கணக்கீடுகளை அந்த மதிப்பீடுகளுடன் நேரடியாக ஒப்பிடலாம்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகளின் அறிக்கையின் பிரகாரம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் 889,358,050 ரூபா (ரூபா. 889.36 மில்லியன்) அல்லது ரூபா 688,538,600 (ரூபா. 688.54 மில்லியன்).

மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் நஷ்டம் குறித்து அர்ஜுன் மகேந்திரனுக்கு அடுத்து மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவாத் கப்ரால் பாரளமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது

“4 வது வருடாந்த கணக்காய்வு அறிக்கையின்படி, இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு 6.63 பில்லியன் ரூபா முதல் 9.68 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முழு பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது மற்றும் கணக்கிடுவது கடினம், ஆனால் நான் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக மத்திய வங்கியின் ஆளுநராக இருந்ததால், வட்டி வீத அதிகரிப்பு காரணமாக, இழப்பு 145 பில்லியன் ரூபாயாக இருக்கும் என்று நாங்கள் கணக்கிட்டுள்ளோம் என்று என்னால் கூற முடியும்.” எனத் தெரிவித்தார்.


Sarinigar Main Logo

❖ | Sarinigar.com
❖ | Facebook

Leave a Reply

error: Content is protected !!