88-89 ஞாபகம் இருக்கின்றதா?

88-89 ஞாபகம் இருக்கின்றதா?88-89 என்பது குறிப்பிட்ட அந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் இடம்பெற்ற நிகழ்வு அல்ல அது பல வருடங்களாக வரிசையாக தொடரப்பட்ட நிகழ்வுகளின் சம்பவங்களின் உருவாக்கமாக காணப்படுகின்றது. அதனுடன் தொடர்புடைய முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் மிக சுருக்கமாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

❂ 1977 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியுடன் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாரிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தரவுகள் படி 6 கொலைகள், வீடுகள் எரிப்பு 37, தாக்குதல்கள் மற்றும் கொள்ளைகள் 1400, அரசியல் பழிவாங்கல்கள் அடிப்படையில் வேலை நீக்கம் 18462 மற்றும் 7288 இடமாற்றங்கள் இடம் பெற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

❂ 1977 ஆகஸ்ட் 17 அன்று நடாத்தப்பட்ட இனவெறிக் கலவரங்களால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தரவுகள் படி இக்கலவரத்தினால் 100 கொலைகள், 284 கற்பழிப்புகள், 8088 வீடுகள் எரிப்பு, 20776 சொத்துக் கொள்ளைகள், சுமார் 40000 தாக்குதல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

❂ 1978 பிப்ரவரி 4, அன்று, ஜே. ஆர். ​ஜயவர்தன முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன் புதிய அரசியலமைப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

❂ 1978 நவம்பர் 20, அன்று கொண்டுவரப்பட்ட முதலாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சிவில் பிரஜா உரிமைகள் ஒழிக்கப்பட்டதோடு ஜே. ஆர். ​ஜயவர்தனவின் பிரதான அரசியல் எதிரியும் முடக்கப்பட்டார்.

❂ பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்க 1978 ஆம் ஆண்டு புதிய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது. இதன் போது மாணவர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களின் தாக்குதல்கள் என்பனவும் பதிவாகியிருந்ததுடன் அதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் தீவிரமாகப் பங்களித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

❂ 1978 மார்ச் 16 ஆம் திகதி களனி பல்கலைக்கழக மாணவர்களை தாக்க வந்த பாதாள குண்டர் கிறிஸ்டோபர் ஜயதிலக்க என்பவர் சண்டையில் கொல்லப்பட்டதுடன் அவரது இறுதி ஊர்வலத்திற்கு ஜனாதிபதி ஜே. ஆர். ​ஜயவர்தன கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

❂ பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்ற ஙோனவல சுனில் என்ற குற்றவாளிக்கு ஜனாதிபதி ஜே. ஆர். ​ஜயவர்தன பொது மன்னிப்பு வழங்கி சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டதுடன், ஙோனவல சுனில் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர் எனவும் பிரசித்தி பெற்ற படலந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

❂ 1980 ஜூன் 5, அன்று சம்பள உயர்வு கோரி மறியல் போராட்டம் செய்த ஊழியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடாத்தப்பட்டதில் அங்கு டி. சோமபால கொல்லப்பட்டார்.

❂ 1980 ஜூலை 17, இல் 300 ரூபா சம்பள உயர்வு கோரி நடாத்தப்பட்ட ஜூலை வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக 40356 ஊழியர்கள் திடீரென தமது வேலை இழந்தனர். இங்கு, தாக்குதல் மற்றும் சிறைவாசம் காரணமாக பாதிக்கப்பட்ட 39 வேலை நிறுத்தக்காரர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

❂ 1981 ஜனவரி 21, இல், கொண்டு வரப்பட்ட கல்வி வெள்ளை அறிக்கைக்கு எதிரான போராட்டம் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் பல மாணவர்கள் குதிரைகளால் மிதிக்கப்பட்டு நிரந்தரமாக முடமாக்கப்பட்டனர்.

❂ 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது ஏற்பட்ட மோதல்களின் போது, ​​தெற்காசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் நூலகத்திற்கு அரசாங்கத்தின் வன்முறைக் கும்பல் தீ வைத்து நசமாக்கினர். இங்கு சுமார் 90000 மதிப்புமிக்க புத்தகங்கள் அழிக்கப்பட்டன.

❂ 1981 அபிவிருத்திச் சபைத் தேர்தல் வாக்குப்பெட்டிகள் காணாமல் போனமை, மோசடியான வாக்குப்பதிவு, அச்சுறுத்தல்கள் போன்ற பல சட்டவிரோத செயல்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டதுடன், இலங்கையில் பாரியளவில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்ற முதல் தேர்தலாக இது வரலாற்றில் இடம்பெறும்.

❂ ஜே.ஆர். ஜெயவர்தன எதிர்க் கட்சித் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமைகளை இல்லாதொழித்து 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி இலங்கையில் முதல் ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே நடத்த நடவடிக்கை எடுத்தார். அத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளரான கொப்பேகடுவவின் வாக்கும் கூட மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

❂ 1982 ஜூலை 22, இல், பௌத்த மாநாட்டு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விரிவுரையின் போது பேராசிரியர் சரத்சந்திர உட்பட குழுவினர் மீது வன்முறைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

❂ லங்கா சமசமாஜக் கட்சியின் உறுப்பினரான விவியன் குணவர்தனவை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமும் இக்கால கட்டத்தில் நடைபெற்றதுடன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகருக்கு அரசாங்கத்தால் பதவி உயர்வு வழங்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

❂ நான்காவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை தேர்தலின்றி நீடிப்பதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார்.

❂ ஒரு நக்சலைட் சதிக் கதை உருவாக்கப்பட்டு அதன் படி விஜய குமாரதுங்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரத்னசிறி விக்கிரமநாயக்க உட்பட பலர் கைது செய்யப்பட்டதுடன் , தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி இந்த நக்சலைட் கதையை பயன்படுத்திக் கொண்டனர்.

❂ பொதுத் தேர்தல் தேவையா இல்லையா என்று கருத்துக் கேட்பதற்காக டிசம்பர் 22, 1982 அன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் படி பொதுத் தேர்தலை ஒத்திவைத்தனர்.

❂ நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தல், சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட இருபது பேரை கைது செய்தல், அத்த பத்திரிகை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட சுதந்திரன் பத்திரிகைக்கு சீல் வைத்தல், சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்கு சீல் வைத்தல், பாதாள குண்டர் படையை பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்தல், வாக்குக் கொள்ளை, மிரட்டல்கள் போன்றவை இங்கு பரவலாக பதிவாகியிருந்தன. பிற்காலத்தில் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

❂ 1983 ஜூலை 24, இல், ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையின் கீழ் தமிழர்களுக்கு எதிராக பல வன்முறைச் செயல்கள் கட்டவிழ்த்தப்பட்டது. கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் இந்த துயரமான காலகட்டத்தில் வீடுகள் எரிப்பு, கொள்ளை, கற்பழிப்பு, தாக்குதல்கள் மற்றும் கொலைகள் என பல கொடூரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

❂ கறுப்பு ஜூலை கலவரத்திற்க்கு இடதுசாரிக் கட்சிகளைக் குற்றம் சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னனி, கம்யூனிஸ்ட் கட்சி, புதிய சமாஜக் கட்சி மற்றும் பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆகியவற்றைத் தடை செய்தது. (ஜூலை 30, 1983)

❂ மக்கள் விடுதலை முன்னனி (ஜே.வி.பி) கட்சி மீதான தடையை நீக்குவதற்காக பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டாலும் அவை அனைத்தும் தொடர்ந்து தோல்வியடைந்தது, பல ஒடுக்குமுறைகளைக் கடந்து ஜனநாயக நீரோட்டத்தில் நுழைந்த ஒரு அரசியல் இயக்கம் இவ்வாறு விதிக்கப்பட்ட அநீதியான தடையின் காரணமாக மீண்டும் ஆயுத அரசியலுக்குள் தள்ளப்பட்டது.

❂ 1983 டிசம்பர் 27 இல், பேராதனை பல்கலைக்கழகத்திற்குள் பொலிஸ் நிலையம் கட்டப்பட்டது, அதற்கு எதிரான போராட்டங்களின் போது பத்மசிறி அபேசேகர (ஜூன் 19) மற்றும் ரோஹன ரத்நாயக்க (ஜூன் 21) ஆகிய இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

❂ 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான பின்னணி அமைக்கப்பட்டது. இந்த தேசத்துரோக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 88 பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

❂ 1987 ஜூலை 28, அன்று, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 121 பேர் நடு வீதியிலேயே கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் 132 பேர் கொல்லப்பட்டதுடன் 712 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டின் கீழ் இந்த கலவரக் காலப்பகுதியில், படலாந்தவில் சித்திரவதைக் கூடம் ஒன்று செயல்படுத்தப்பட்டதுடன் இங்கு 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

❂ 1988 மாகாண சபைத் தேர்தல், 1988 ஜனாதிபதித் தேர்தல், 1989 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய அனைத்து தேர்தல்களும் கலவரத்தின் பின்னனியில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறைகளில் நடைபெற்றன.

❂ இவ்வாறு 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரிசைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சம்பவங்கள், வன்முறைகள், கலவர நிகழ்வுகள் தென்னிலங்கையில் பாரிய ஆயுதப் போராட்டத்திற்கு களம் அமைத்ததுடன் அது நாட்டையே பெரும் அவலத்திற்கு ஆளாக்கியது.

❂ 88 – 89 ஞாபகம் இருக்கிறதா என்று கேட்பவர்கள் இந்த கடந்த கால வரலாற்று சம்பவங்களின் பின்னனி பற்றிய தௌிவு இருப்பது மிகவும் அவசியம்.

Sarinigar-SARINIGAR

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!