ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள விம்பங்களும் பிரம்மைகளும் இருக்கின்றன.
ஆங்கில மொழிப் புலமை கொண்ட, சர்வதேச அரங்கில் எத்தகைய சவால்மிக்க நேர்காணல்களையும் அநாயாசமாக எதிர்கொள்ளும் திறன் வாய்ந்த, மேலைத்தேய அரசியல் மற்றும் ஊடக அரங்கில் நன்மதிப்புப் பெற்ற, நவதாராண்மைவாத ஒழுங்கின் தூதுவர்களுள் ஒருவராகக் கருதப்படக் கூடிய, தேசிய மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் எந்தவொரு விமர்சனத்தையும் புள்ளிவிபரங்களோடும் கோட்பாட்டுப் பின்னணிகளோடும் அணுகக் கூடிய ஆளுமை பெற்ற, ராஜதந்திரம் மிக்க பழுத்த அரசியல்வாதி என்பன போன்ற மிகப்பெரும் விம்பங்கள், பிரம்மைகள் ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த விம்பங்கள், பிரம்மைகள் அத்தனையும் ஒருசேர ஒரே மேடையில் சுக்குநூறாக உடைந்து போன ஒரு நிகழ்வுதான் அல்-ஜஸீராவின் Head-to-Head நிகழ்வு.
முதலில் அல்-ஜஸீராவின் இந்த Head-to-Head நிகழ்வானது ஒரு சாதாரண தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கமும் அடிப்படையும் சாதாரண அரசியல் கலந்துரையாடல் நிகழ்வுகளை விடவும் மிகவும் வித்தியாசமானது. Oxford Debate இன் பல்வேறு உள்ளீடுகள் இதில் காணப்படுகின்றன.
அத்துடன் ஒரு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணைக்குட்படுத்தப்படும் முறைமையின் உள்ளீடுகள் இந்த நிகழ்வில் இருக்கின்றன. அவ்வாறே ஒரு குற்றப்புலனாய்வு விசாரணையில் கேட்கப்படும் interrogative questions இன் சாயலும் இந்த நிகழ்வில் இருக்கிறது. இது ஒன்றும் இன்று நேற்று புதிதாக ரணிலுக்கென்று உருவாக்கப்பட்ட சதிவலையல்ல.
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹூட் ஓல்மர்ட் முதற்கொண்டு, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்கள், ரஷ்ய அரசின் பிரதானிகள், மலேஷியாவின் அன்வர் இப்றாஹீம், ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் பொதுச் செயலாளர் ராம் மாதவ், காங்கிரஸின் சஷி தரூர் வரைக்குமான ஏராளமான அரசியல்வாதிகளும், அரசியலறிவாளர்கள் பலரும் கடந்த 13 வருடங்களாக இந்த Head-to-Head நிகழ்ச்சியில் மஹ்தி ஹசனால் பொது மக்கள் நீதிமன்றத்தில் வைத்து பகிரங்கமாக குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அங்கே யாருக்கும் எந்தவிதமான சருகைகள் வழங்கப்பட்டதும் கிடையாது, கருணை காட்டப்பட்டதும் கிடையாது. அனைவருமே வறுத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், நானறிய இதுவரை இந்த Head-to-Head நிகழ்வில் கலந்து கொண்டு வந்த சூடு ஆறும் முன்பு அவசர அவசரமாக ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி தன்னிலை விளக்கம் வழங்கும் வேலையை ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாருமே செய்ததில்லை.
Boston Legal, Suits, Lincoln Lawyer, The Good Wife போன்ற டீவி சீரீஸ்களைப் பார்த்தால் இந்த courtroom cross examination எப்படி இருக்கும் என்பது தொடர்பில் நல்லதொரு பின்னணியைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு real life public courtroom இல் ஒரு தலைசிறந்த defence lawyer மூலமாக குறுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டால் எப்படியிருக்குமோ அப்படியான ஒரு நிகழ்வுதான் அல்-ஜஸீராவின் இந்த Head-to-Head நிகழ்வு.
அதில் கேட்கப்படும் கேள்விகள் selective ஆகவும், interrogative ஆகவும், offensive ஆகவும் argumentative ஆகவுமதான் இருக்கும். அந்த நிகழ்ச்சியின் இயல்பே அதுதான். ‘நீங்கள் ஓய்வு நேரத்தில் பத்திரிகை படிப்பீர்களா? அல்லது நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்பீர்களா?’ போன்ற இலங்கை யூடியூப்பர் லெவல் கேள்விகளை எதிர்பார்த்து அங்கே சென்றிருந்தால் அது ரணிலின் தவறு.
மிளகாய் திண்ணும் போட்டிக்கும் போனால் உறைப்பையும் காரத்தையும் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். க்ளீன் போல்டாகி விட்டு வந்து ‘ஷொஐப் அக்தர் மாதிரி வேகமாக பந்து வீசினால் நான் எப்படி துடுப்பெடுத்தாட முடியும்?’ என்று சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது பாருங்கள்.
என்ன கேள்வி கேட்கப்பட்டிருந்தாலும் கூட அதனை பண்பாடான, ராஜதந்திரமான, அகம்பாவமற்ற முறையில் அணுகியிருந்தால் ரணிலுக்கு நன்றாக score பண்ணி விட்டு வந்திருக்கக் கூடிய ஒரு நிகழ்வில், தனது அகம்பாவத்தினதும், மிகை நம்பிக்கையினதும் காரணமாக ரணில் விக்ரமசிங்க நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னைப் பற்றிய விம்பத்தையும் உடைத்துக் கொண்டு வந்தார் என்பதுதான் நிதர்சனம்.
ரணிலின் அகம்பாவமும், திமிரும் இந்த நிகழ்ச்சிக்குத் தயாராவதை விட்டும் அவரை முழுமையாகத் தடுத்திருப்பது தெளிவாகப் புரிகிறது. எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் ஒரு மாணவன் எந்த விதமான முன்னாயத்தமும் இல்லாமல் பரீட்சை மண்டபத்துக்குச் சென்று வினாத்தாளைப் பார்த்ததும் வெலவெலத்துப் போய் நிற்பது போன்றுதான் ரணிலும் உட்கார்ந்திருந்தார்.
இறுதியில் பெனலிஸ்டுகளில் ஒருவர் ரணிலுக்காக வக்காலத்து வாங்கப் போய் அதிலும் செமையாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலைதான் வந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் செல்ல முன்பதாக, குறைந்தது ஒரு பத்து Head-to-Head நிகழ்சசிகளையாவது பார்த்து, மஹ்தியின் தாக்குதல்களை எப்படி ராஜதந்திர ரீதியில் சமாளிக்கலாம் என்று ரணில் தயாராகியிருந்திருக்க வேண்டும்.
உண்மையில் ரணில் எந்தக் கேள்விக்குமே சரியாக முகம் கொடுக்கவில்லை. ஹிரு, தெரண போன்றவற்றின் so-called journalist களையும், கூலிக்கு மாரடிக்கும் சில யூடியூப்பர்களையுமே பெரும்பாலும் சந்தித்துப் பழகிய ரணிலுக்கு மஹ்தி ஹசனெல்லாம் டூ மச் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிந்தது.
ரணில் விக்ரமசிங்க என்னென்ன வகையிலெல்லாம் இந்த நிகழ்வில் சொதப்பியிருக்கிறார் என்பதை கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் நிர்மால் ரன்ஜித் தேவசிரி தெளிவாக புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
மஹ்தி கேட்ட கேள்விகளால் சர்வதேச அரங்கில் இலங்கையின் மானத்துக்கு ஒரு பிரச்சினையும் வரவில்லை. கேட்கப்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றின் பின்னாலும் பல்வேறு நியாயங்கள் இருக்கின்றன.
இப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் வழங்கி விட்டு வருவதல்ல. மாற்றமாக, அந்தக் கேள்விகளை ராஜதந்திர ரீதியாக அணுகுவதை வைத்துத்தான் சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்புக்கு ஏதாவது சாதகமான புள்ளிகள் கிடைக்கும்.
இப்போது, ரணில் விக்ரமசிங்க பார்த்து விட்டு வந்த வேலையால் ‘இலங்கையின் மிகவும் ராஜதந்திரம் மிக்க மூத்த அரசியல்வாதியொருவரின் எதிர்வினையாற்றலே இவ்வளவுதானா?!’ என்ற ஏளனப் பார்வைதான் சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும்.
பேராசிரியர் நிர்மால் கூறுவது போல ‘ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வுகளுக்குச் செல்வதன் நோக்கம் நாட்டின் மானத்தைக் காப்பாற்றுவதல்ல; தனது அகம்பாவத்தையும் திமிரையும் வெளிப்படுத்துவதுதான்’ என்பதுதான் உண்மையாக நடந்திருக்கிறது.
ஆனால் கோட்டா ஜனாதிபதியானதில் ஒரு நன்மை இருந்தது போல, ரணில் விக்ரமசிங்க இதில் கலந்து கொண்டதிலும் ஒரு மிகப்பெரும் நன்மை இருக்கிறது. ‘ரணிலால் எதனையும் சமாளிக்க முடியும்’ என்ற அந்தப் பிரம்மையாவது பலரின் உள்ளத்திலிருந்து தகர்ந்திருக்குமல்லவா!
✍️ Affan Abdul Haleem