நோன்பு நோற்பதற்கு முன்னர் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸுபஹ்டைய பாங்கிற்குப் பின்னர் குளிப்பதில் எந்த குற்றமும் இல்லை. அந்த நோன்பும் பரிபூரணமானது தான்.
அதே போன்று ஒரு நோன்பாளி பகல் வேளையில் தூக்கத்திலிருக்கும் போது குளிப்பு கடமையாகிவிட்டால், அவர் கடமையான குளிப்பை குளித்துக் கொண்டால் மாத்திரம் போதுமாகும்.
ஆனால் ரமழான் மாதத்தின் பகல் நேரத்தில் ஒருவர் வேண்டுமென்றே முழுக்காளியாவது நோன்பையும் முறித்துவிடும். அத்துடன் அது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும்.
அவ்வாறே ரமழான் மாதத்தில் பகல் நேரத்தில் நோன்பை நோற்ற நிலையில் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுவதும் நோன்பை முறித்துவிடும்.
அது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றம் என்பதுடன் அந்த நோன்பை மீண்டும் நிறைவேற்றுவது மட்டுமன்றி குற்றப்பரிகாரமும் செய்ய வேண்டும்.
அதற்கான குற்றப்பரிகாரம், ஒரு அடிமையை உரிமை விடுவதாகும், அதற்கு அவரால் முடியா விட்டால் தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியா விட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
நபி (ﷺ) அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன் எனக்கூறினார்.
உம்மை நாசமாக்கிய எது? என நபி (ﷺ) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர் ரமளான் மாதத்தில் (பகல் வேளையில்) என் மனைவியோடு நான் உடல் உறவில் ஈடுபட்டேன் என கூறினார்.
அதற்கு நபியவர்கள் ஒரு அடிமையை உரிமை விட முடியுமா என (அம்மனிதரிடம்) நபி (ﷺ) அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக்கூறினார்.
அப்படியாயின் தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க முடியுமா என நபி (ﷺ) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அம்மனிதர் முடியாது எனக் கூறினார்.
அப்படியாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா? என நபி (ﷺ) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அம்மனிதர் முடியாது எனக் கூறினார்.
பின்னர் நபி (ﷺ) அவர்கள் அவரை அங்கு அமருமாறு கூறினார்கள். அம்மனிதரும் அமர்ந்து விட்டார்.
அப்போது நபி (ﷺ) அவர்களிடம் ஒரு பேரீத்தம் நிறைந்த பழக்கூடை நன்கொடையாக கொண்டுவரப்பட்டது. அப்போது அதை (ஏழைகளுக்கு) தர்மமாக கொடுத்துவிடும்படி நபி (ﷺ) (அம்மனிதருக்கு) கூறினார்கள்.
மதீனாவின் எல்லைக்குள் எங்களைவிட ஏழைகள் யாருமில்லையென அம்மனிதர் கூறினார். (அதைக்கேட்டதும்) நபி (ﷺ) அவர்கள், அவர்களின் கடைவாய்ப் பல் தெரியுமளவு சிரித்துவிட்டு, அதை எடுத்துச் சென்று, உனது குடும்பத்திற்கே உணவாக கொடுத்து விடு என்றார்கள். (திர்மிதி)
மெளலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நன்றி: இஸ்லாம் கல்வி
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!