வெளிநாட்டு வாழ்க்கை – வரமா? சாபமா?
வெளிநாட்டு வாழ்க்கையினால் பொருளாதாரம் பெருகுகின்றது, செல்வ வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத் தரம் உயருகின்றது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்கள் கடமைகளை தமது தாய் நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் உள்ள சிரமமும் பணச்செலவும் கணிசமான அளவு குறைவதால் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் குறைந்த தூரமே பயணித்து அதிகம் பயனடைகின்றார்கள்.
அதுமட்டுமின்றி இவர்களின் உறவினர்களில் அதிகமானவர்கள் – குறிப்பாகப் பெற்றோர்கள், பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களில் அதிகமானவர்கள் மேற்கூறிய வணக்கங்களுக்காக வௌிநாட்டிலுள்ளவர்களின் உதவியால் அழைத்து வரப்பட்டுப் பயனடைகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
எனினும் மேற்சொன்னவற்றில் இலாபம் மற்றும் பயன்கள் இருந்தாலும், அவற்றுடன் நஷ்டமும், கஷ்டமும் குறைபாடுகளும் அதிகமாகவே இருக்கின்றன. அவற்றை ஒருவரியில் சொல்லாமல் பட்டியலிட்டுக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும்.
01. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் கடமைகளில் குறைபாடு
பொதுவாக 20 வயதில் வெளிநாட்டு தொழில் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கக்கூடிய ஒரு நபர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள், ஆகக் குறைந்து ஒரு வருடமாவது தமது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்.
இந்த ஒன்று – இரண்டு வருட வாழ்க்கையில் தமது பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் பெரும்பாலானவற்றைச் செய்ய தவறிவிடுகின்றனர்.
இந்தக் காலங்களில் எத்தனை வலிகளினால், நோய் வியாதிகளால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகக்கூடிய சந்தர்ப்பங்களில் தன் பெற்றோரை வைத்தியரிடம் கொண்டு செல்ல, அவர்களுக்கு பணிவிடை செய்ய என எத்தனை பேர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்று கணக்குப் பார்த்தால் எஞ்சுவது மிக மிகக் குறைவு.
இதைவிடப் தமது பெற்றோரின் மரணத்தின் பொழுது, ஜனாஸாத் தொழுகை மற்றும் நல்லடக்கத்திற்கு உடனிருந்தவர்கள் எத்தனை பேர்?. தனது பெற்றோரின் கடைசி மூச்சினைக் காண கிடைக்கவில்லையே என எத்தனை இதயங்கள் ஏங்கி இருக்கும்?.
அதேபோல் தனது கடைசி மூச்சு, தான் பெற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் நிகழ வேண்டும் என்று எத்தனை பெற்றோர்களின் இதயங்கள் எதிர்ப்பார்திருக்கும்? இதற்கெல்லாம் சாவு மணி அடிக்கின்றது இந்த வெளிநாட்டு வாழ்க்கை.
பெற்றோருக்கு நன்றி செலுத்துவது, பணிவிடை புரிவது மற்றும் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான அமல்கள் எவை என்பது குறித்து அல்லாஹ்வின் வேதமாககிய குர்ஆனும் நபிமொழியும் என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்:
“நாம் மனிதர்களுக்கு, தங்களது பெற்றோர் (இருவருக்கும் நன்மை செய்வது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்ப காலத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்குப் தாய்ப்பால் குடி மறத்தல் இரண்டு வருடங்கள் ஆகும். ஆகவே, நீ எனக்கும், உனது பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கின்றது” (அல்குர்ஆன் 31: 14).
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான செயல் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதற்கான உரிய நேரத்தில் தொழுவதாகும்” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்டேன். அதற்கு, “பெற்றோருக்கு நன்மை (பணிவிடை) செய்வதாகும்” என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி) (புகாரி, முஸ்லிம்)
இப்படியாக பல்வேறு மகத்துவத்தையும், சிறப்புகளையும் பெற்றிருக்கக் கூடிய தாயினது சிறப்பை மேன்மைப்படுத்தி சிலாகித்துக் கூறக்கூடிய மேலும் சில நபி மொழிகளையும் காண்போம்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய நட்பிற்குக்கு மனிதர்களில் அதிக உரிமை பெற்றவர் யார்?” என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என அவர் வினவினார். அதற்கவர்கள், “உமது தாய்” என்றார்கள். “பின்னர் யார்?” என அவர் வினவினார். அப்பொழுதும் “உமது தாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “பின்னர் யார்?” என்றார் அப்பொழுது, “உமது தந்தை” எனக் கூறினார்கள். (புகாரீ: 5514)
“வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் (அவர்களின் நலனைப் பெறாமல் புறக்கணித்து) சுவனம் செல்வதற்கு முடியாது போன மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) அறிவிப்பாளர்: அபூ ஹூரைரா (ரலி) அவர்கள்.
மேற்கண்ட அல்-குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் மிக தெளிவாக விளக்குகின்ற செய்தி என்னவெனில், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் அவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பதுமாகும்.
பெற்றோருக்குப் பணிவிடை செய்யக் கூடிய விடயத்திலாவது அந்தப் பெற்றோருக்கு ஒருவருக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்து அவர்களில் ஒருவரோ அல்லது அதிகமானோரோ பெற்றோருடன் இருந்து மற்றவர்கள் வளைகுடா வாழ்க்கையின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை அனுப்பிக் கொடுத்து ஊரில் இருக்கக்கூடிய மற்ற பிள்ளைகள் மூலம் கவனிக்கப் படுகிறார்கள் என்றால் ஓரவிற்கு ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் அடுத்து நாம் பார்க்க இருக்கும் பாதிப்புகள் குறித்து கவலைப் படாமல் இருக்க முடியவில்லை.
02. மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகள்
திருமணம் முடித்த எத்தனையோ இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாழ்வாதார கஷ்டங்களுக்காக வெளிநாட்டிற்கு தஞ்சம் புகுந்துள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் திருமணம் என்ற இல்லற பந்தத்தின் மூலம் தமது வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்கள்?
திருமணம் முடித்த ஒரே நாளில், ஒரே வாரத்தில் அல்லது ஒரே மாதத்தில் என எத்தனை சகோதர சகோதரிகள் திருமண பந்தம் ஆரம்பிப்பதற்கு முன்னறே வெளிநாட்டிற்கு வாழ்க்கைப் பட்டதால் பிரிய மனமின்றி தன் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து செல்கின்றார்கள். கணவன் தனது மனைவிக்கு, மனைவி தனது கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக, முறையாக நிறைவேற்றுகின்றார்களா என்றால் அது மிக சொற்பனதாகும்.
குறிப்பாக, திருமணம் முடித்த நாளிலிருந்து சுமார் 20 வருடகாலம் வெளிநாட்டில் ஒருவர் தொழில் புரிந்திருந்தால் அவரது இல்லற வாழ்வின் காலம் எத்தனை என சற்று கணக்குப் பார்த்தால் அது குறைந்த பட்சம் 24 மாதம் அல்லது அதிகபட்சமாக 48 மாதமாக இருக்கும். அதாவது சுமார் 2 அல்லது 4 வருடங்களாக இருக்கும்.
இளமையில் பெற வேண்டிய சுகத்தை அடைய விடாமல் பொருள் தேடும் சுகம் தடுக்கின்றது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தக் கதை போல், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு பிறகு அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை விடுமுறைக்காக நாட்டிற்குச் சென்று மனைவியிடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபடக் கூடியவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு திரும்ப வேண்டிய நாள் நெருங்க நெருங்க கணவன்- மனைவி இருவருக்கு மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், கவலைகள், ஏக்கங்களை வார்த்தைகளால் கூற முடியாது. இதனை உணர்ந்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.
மீண்டும் அடுத்த விடுமுறை வரும் வரைக்கும் இருவருக்கும் இல்லறம் எனும் நல்லறம் கிடையாது. உள்ளத்தில் புரண்டெழும் ஏக்கங்களையும், ஆசைகளையும் கடிதத்திலும், தொலைபேசியிலும் பறிமாறிக் கொள்ள வேண்டியது தான்.
இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் இறை நம்பிக்கையைப் பெற்றிருக்கின்ற நல்லுள்ளம் பெற்ற சகோதர, சகோதரிகளைத் தவிர ஏனையவர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்நிய நபர்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும், வெளிநாட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அந்நியப் பெண்களுடன் பழகக்கூடிய சூழ்நிலைகளினால் வழிதவறிவிடாமல் இருக்கவும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக இவ்வாறு மக்கள் வழிதவற வாய்ப்புகள் உள்ளன என்பதையும் இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
இதற்கெல்லாம் காரணம் யாதெனில் வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படுத்திய பிரிவுதான். கணவன்-மனைவி இடையில் உரிமைகள் வழங்குதல் குறித்து நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தினை இரத்தினச் சுருக்கமாக ஒரு விடயத்தை கூறினால் இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
அபூ ஜுஹைபா வஹப் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ஸல்மான் (ரலி) அவர்களுக்கும், (அன்ஸாரியான) அபூதர்தா (ரலி) அவர்களுக்கும் இடையில் சகோதரத் தோழமையை ஏற்படுத்தினார்கள்.
ஸல்மான் (ரலி) அவர்கள் அபூதர்தா (ரலி) அவர்களை சந்தித்தார்கள். அப்பொழுது (அவரது மனைவி, உம்மு தர்தா (ரலி) அவர்கள் (சாதாரண) பழைய ஆடை அணிந்திருப்பதை ஸல்மான் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். “உங்களது விடயம் என்ன? (ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்?)” என அவர்களிடம் ஸல்மான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, “உமது சகோதரர் அபூதர்தா (ரலி) அவர்களுற்கு உலக விடயங்களின் பால் தேவை இருப்பதில்லை (இதனால் நான் என்னை அலங்கரித்துக் கொள்வதில்லை)” என்றார்கள்.
பின்னர் அபூதர்தா (ரலி) அவர்கள் வந்தார்கள். ஸல்மான்( ரலி) அவர்களுக்காக உணவு தயாரித்து அவரிடம் “நீங்கள் உண்னுங்கள்! நான் இன்று நோன்பாளி” எனக் கூறினார்கள். உடனே ஸல்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் உண்ணாதவரை நான் உண்ண மாட்டேன்” எனக் கூறவே அவர் (தமது சுன்னத்தான நோன்பை முறித்து) அவருடன் சாப்பிட்டார்கள்.
பின்னர் இரவானதும் அபூதர்தா( ரலி) அவர்கள் (சுன்னத்தான) தொழுகைகளைத் தொழ எழுந்து நின்றார்கள். உடனே ஸல்மான் (ரலி) அவர்கள், அவர்களிடம் “உறங்குவீராக!” எனக் கூறினார்கள். பின்னர் சற்று நேரம் உறங்கினார். பின்னர் (மீண்டும் எழுந்து சுன்னத்தான) தொழுகைளை தொழ நின்றார்கள். அப்பொழுதும் ஸல்மான் (ரலி) அவர்கள் “உறங்குவீராக!” எனக் கூற அவர்கள் மீண்டும் உறங்கிவிட்டார்கள்.
இரவின் கடைசிப் பகுதி ஆனதும் ஸல்மான் (ரலி) அவர்கள், அபூதர்தா (ரலி) அவர்களிடம் “இப்பொழுது எழுந்திருங்கள்!” என்றார். பின்னர் இருவரும் எழுந்து (நஃபில்) தொழுதார்கள். பிறகு அபுதர்தா (ரலி) அவர்களிடம் ஸல்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள் : “உமது இறைவனாகிய அல்லாஹ்விற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளது. உமது ஆன்மாவிற்கும் உம்மிடம் சில உரிமைகள் உள்ளது. உமது குடும்பத்தினருக்கும் உம்மிடம் சில உரிமைகள் உள்ளது. உரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவர்களது உரிமையை வழங்குவீராக!”
பின்னர் அபுதர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸல்மான் (ரலி) அவர்கள் கூறியதைக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் “ஸல்மான் (ரலி) உண்மை கூறி விட்டார்” எனக் கூறினார்கள். (ஆதாரம் – புகாரி)
மேற் கூறப்பட்ட நபி மொழியில், மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் குறித்துத் தௌிவாக விளக்கிவிட்டது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், திருமணம் கண்கள் மற்றும் அபத்தை பாதுகாக்கின்றது (ஹதீஸ்). திருமணம் என்பது ஈமானின் பாதி (ஹதீஸ்). போதுமானளவு சக்தி இருக்குமேயானால் திருமணம் செய்து கொள்ளுங்கள், அல்லது நோன்பிருந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ்).
ஆக, திருமணம் என்பது ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் பொழுது அந்த கேடயத்தைப் பயன்படுத்தக் கூடிய அந்த மனிதனும் கேடயமும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் அவையிரண்டிற்கும் பாதுகாப்பில்லை என்பது மட்டுமின்றி இரண்டிற்கும் எந்த நேரத்திலும் இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள் வந்து விடலாம்.
03. பிள்ளைகளுக்குச் செய்யும் பொறுப்புகளில் குறைபாடு:
குழந்தைப் பிறப்பின் காரணமாக அடையக் கூடிய ஒரு தாயினது வேதனையை எத்தனை பேர்கள் கண்டிருக்கிறார்கள்? குழந்தை பிறக்கின்ற போது தன்னுடைய கணவன் தன்னுடன் இல்லையே என்று எத்தனை மனைவியர் கண்ணீர் விட்டிருப்பார்கள்? தான் பெற்ற குழந்தையின் முகத்தை ஒரு சில மணித் துளிகளில் எத்தனை தந்தை கண்டிருக்கின்றார்கள்?
தன்னுடைய குழந்தைகளின் அழகான சிரிப்பை, அழுகையை, செல்லமான கோபத்தை, உண்ணும், உறங்கும் பாணியினை, தத்தித் தவழ்ந்து நடக்க முயலும் பொழுது தவறி விழும் கண் கொள்ளாக் காட்சியினை, மழலை மொழியினை இன்னும் இன்னும் இது போன்ற வாழ் நாளில் மறக்கவே முடியாத சிறு சிறு சந்தோஷங்களைக் கண்டுகளித்தவர்கள் எத்தனை பேர்?
பிறந்த குழந்தை(களு)க்குத் ஒரு தாய், தனக்குப் பிறகு அறிமுகம் செய்யக் கூடிய இரண்டாவது நபர் யாரெனில் அக் குழந்தையின் தந்தை. ஆனால் அந்த தந்தையின் முகம் பார்க்கும் நிலையில் விட்டு வைக்கவில்லையே இந்த வெளிநாட்டு வாழ்க்கை?
குழந்தை(களு)க்கு இம்மையிலும் மறுமையிலும் பயன் தரக்கூடிய கல்வியைக் கொடுக்கக் கூடிய விடயத்திலும் தந்தையின் பங்கு மிக மிகக் குறைவு தான். குழந்தை(கள்) என்ன கற்றிருக்கின்றார்கள்? என்ன விடயங்களை கற்கப் போகின்றார்கள்? எப்படிக் கற்கின்றார்கள்?
கற்றுத் தரக் கூடிய ஆசிரியர்களின் நிலை என்ன? பாடசாலை மற்றும் கல்லூரிகளின் நிலை என்ன? சக மாணவர்கள் மற்றும் மாணவிகளின் ஒழுக்க நிலை எவ்வாறு உள்ளது? யார் யாரோடு பழகுகிறார்கள்? நண்பர்கள் யார்? எந்த நல்ல விடயங்களை வளர்த்துக் கொண்டுள்ளார்கள் அல்லது தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார்கள்? போன்ற விடயங்களை அறிந்து வைத்துள்ள தந்தையர் எத்தனை பேர்?
கணவன் மனைவியாக வெளிநாட்டில் குடும்பம் நடத்தக் கூடியவர்களில் கணிசமானவர்கள் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளைத் தாய் நாட்டில் விட்டு விட்டு தான் மட்டுமே இங்கே வாழ்கிறார்கள்.
இதனால் பெற்றோர்களின் அன்பும், பாசமும் அரவணைப்பும் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் வளர்ந்து நாளடைவில் தமது பெற்றோரை மதிக்காத, எதிர்க்கக் கூடிய பிள்ளைகளாக மாறிவிடும் கொடுமையும் ஏற்படலாம்.
04. உறவினர்கள் மற்றும் சமுதாய மக்களுக்கு
தொடர்ச்சியாக நிகழக் கூடிய பிறப்பு, மரணம், திருமணங்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய இரு பெருநாள் தினங்கள், விடுமுறை நாட்கள் இன்ன பிற இனிய நாட்களை உறவினர்களோடும், நண்பர்களுடனும், சமுதாயத்தோடும் பகிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?
பெற்றோர்கள், பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாய மக்கள் மரணித்த போது மையத்துகளை நேரில் கண்டவர்கள், அவர்களது ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டவர்கள், அடக்கம் செய்யக் கூடிய நிகழ்வுகளில் உடன் நின்றவர்கள் எம்மில் எத்தனை பேர்?
05. வீண் விரயம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை
வழமையாகிப் போன இன்றைய நடைமுறையைச் சொல்வதானால் நமது வீட்டுப் பெண்களும் சரி, நமது பிள்ளைகளும் சரி கிடைக்கின்ற வருமானத்தை விட அதிகமாக அநாவசிய செலவுகள் செய்ய பழகியிருக்கின்றார்கள்.
ஆரம்பத்தில் கூறியது போன்று ஒரு குடும்பத்தின் முதலாவது நபர் தனது வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னர் இருந்த வாழ்வாதாரச் செலவுகளையும் அதற்குப் பிறகு உள்ள செலவுகளையும் ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்தால் மிகப் பெரிய வித்தியாசத்தைக் கண்டு கொள்ள முடியும்.
சாதாரணமாக மாதாந்தம் ரூபாய் 3000 மாத்திரமே தன்னுடைய மனைவி, மக்களுக்காக அனுப்பி வைத்தார் ஒரு சகோதரர். ஊரிலுள்ள அவரது மனைவியும் கணவரின் சூழ்நிலை அறிந்து புரிந்து அந்தப் பணத்தில் மாதாந்த அத்தியவசிய செலவுகள் போக சுமார் ரூபாய் 1000 வரையில் சேமிக்கக் கூடியவராகவும் இருந்திருக்கின்றார்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அக்கம் பக்கத்திலுள்ள வெளி நாடுகளில் பணி புரிபவர்களின் பெற்றோர்களும் மனைவிகளும் வாழக்கூடிய ஆடம்பரமான, பகட்டான, பெருமையான, மற்றும் வீணான செலவுகளைக் கண்டதன் பின்னர் ‘தானும் ஏன் அது போன்று வாழக் கூடாது?’ என்று அந்தப் பெண்ணை எண்ண தூண்டியதன் விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக அனாவசியமான, வீணான பொருட்களுக்கு செலவு செய்ய வைத்துள்ளது இந்த வெளிநாட்டு வாழ்க்கை.
எப்படியான நிலை என்றால் ஆடம்பர மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதின் காரணமாக முதலில் ஆடம்பரமான பெரிய டீவி வீட்டில் நுழைந்தது. பிறகு டெலிபோன், மொபைல், தொடர்ந்து வீடியோ, டீவீடீ, ஆடியோ, வொசிங் மெசின், பிரிஜ், மைக்ரோ அவன், விதவிதமான சோபாக்கள், வீட்டு அலங்காரம், வோட்டர் கூலரில் தொடங்கி எயர்கண்டிஷன் வரை. ஸ்கூட்டி, பைக் (இந்த பட்டியலில் குறிப்பிடாத பொருள்களும் அடங்கும்).
இதுபோன்ற சாதனங்கள், பொருட்கள் தன் வீட்டில் இல்லை என்றால் தங்களை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் போன்ற காரணங்கள் இதற்கெல்லாம் கற்பிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஷிர்க்கான மற்றும் பித்அத்தான செயல்களை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களைக் காரணங் காட்டி வீணான அநாவசியமான விருந்துகள், உபசரிப்புகள் எனச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதனால் வருமானம் பற்றாக் குறை ஏற்படுகின்றது. தன்னிறைவு அடைவதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவாக உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு மீண்டு வர முடியாத நிலையில், தொடர்ந்தும் வௌிநாட்டில் வேலை செய்ய வேண்டிய நிலையில் பல பேர் வாழ்ந்து வருகின்றனர்.
வேலை பார்க்கும் நிறுவனமே கடைசியில், “உமக்கு வயதாகிவிட்டது. நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இனிமேலும் உன்னால் உழைக்க முடியாது. இதற்கு மேல் வேலை கிடையாது, நீ இருக்க வேண்டாம் உன்னுடைய நாட்டிற்கு திரும்பி சென்று விடு” என்று அனுப்ப வேண்டும்.
அல்லது அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் தீர்க்க முடியாத பெரும் நோய்கள் ஏற்பட்டு தொடர்ந்தும் இருக்க முடியாத நிலையில் நாட்டிற்கு திரும்பும் நாள் வரை வௌிநாட்டு வாழ்க்கையில் உழன்று, சுழன்று கொண்டிருக்க வேண்டியது தான்.
வெளிநாட்டு வாழ்க்கை வாழக் கூடிய சகோதர-சகோதரிகளின் அதிகமானவர்களின் வீடுகளிலுள்ள உறுப்பினர்கள் அநாவசியமான வீண் விரயமான மற்றும் ஆடம்பரமான செலவுகள் அதிகரிக்கக் காரணம் என்னவென்றால்,
வௌிநாட்டில் உழைக்கக் கூடிய தனது தந்தையோ, கணவனோ, சகோதரனோ என்ன வேலை செய்கின்றார்கள்? என்ன கஷ்டப்படுகின்றார்கள்? என்று அறியாததால் தனக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை முன்னூதாரணமாகக் கொண்டு செயல்படுகின்றார்கள்.
ஆனால் தன் குடும்பத்தாருடன் தாய்நாட்டில் இருக்கக் கூடிய சூழ்நிலையில் மேற்கூறிய இரத்த பந்தங்கள் உழைத்து விட்டு வீடு திரும்பும் போதுள்ள அசதியையும் களைப்பையும் வியர்வையும் நேரில் காணும் போது உழைப்பின் கஷ்டத்தை கண்டறிந்து வீணான மற்றும் ஆடம்பரமான செலவுகளைச் செய்ய தயங்குவார்கள் அல்லது செய்யாமல் இருந்து விடுவார்கள் என்பதில் எந்தளவும் சந்தேகமில்லை.
06. குடும்ப உறுப்பினர்களினது பாதுகாப்பின்மை
எத்தனையோ சகோதரர்கள் பல்வேறு கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் பலவாறு கடன்களைப் பெற்றும் ஒரு வீட்டினைக் கட்டி விடுகிறார்கள்.
எத்தனையோ குடும்பங்களில் ஆண்கள் தன் நாட்டில் இல்லாத சூழ்நிலையால் தினமும் அச்சத்திற்கும், ஆதரவிற்கும் மத்தியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் எமது குடும்பப் பெண்கள் பொழுதைக் கழித்து வருகின்றார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
இன்னும் இது போன்ற பல்வேறுபட்ட பாதிப்புகள் மற்றும் குறைபாடுகள் இந்த வெளிநாட்டு வாழ்க்கை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்தும் கூறிக் கொண்டே செல்லலாம்.
வறுமை காரணமாக வெளிநாட்டிற்கு சென்ற நம்மில் பலர், அல்ஹம்துலில்லாஹ்; வறுமை போய்விட்டது. ஆனால் வசதியான வாழ்க்கை நடைமுறையும், அநாவசியமான செலவுகளும், ஆடம்பரங்களும் நமக்கு மத்தியிலும் நமது குடும்பத்தாருக்கு மத்தியிலும் நுழைந்துள்ளதால் இதனைச் சீர் செய்வதற்கு அல்லது திருப்திபடுத்துவதற்கான சூழ்நிலையில் இருப்பதால் வறுமை ஒழிந்த பிறகும் நம்மால் திரும்பி செல்ல முடியாத நிலையில் தான் இருக்கின்றனர்.
அதாவது ஆற்றில் கம்பளி ஒன்று மிதந்து வந்ததைக் கண்டதும் நாம் அதனை எடுத்து பயனடையலாம் என்ற ஆசையில், ஆவலில் ஆற்றில் குதித்துக் கம்பளியை பிடித்து விட்ட பிறகுதான் தெரிய வந்தது,
அடடா! நாம் பிடித்தது கம்பளி அல்ல; மாறாக அது கரடி என்றும் அது எம்மைப் பிடித்துக் கொள்ள, அதிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் ஆழம் அறியாமல் காலை விட்ட கதையாகி கரடியிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் யதார்த்தம்.
ஆக இறுதியாக, முடிவாக எந்தவொரு ஆண்மகன் தன் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்து உழைத்து சாப்பிடுவார்களேயானால் அது, தான் பிறந்த தாய் நாடாக இருந்தாலும், அல்லது வெளிநாடாக இருந்தாலும் அது தான் தாம் பெற்ற வரமாகுமே ஒழிய,
தான் தனியாகவோ அல்லது தன்னோடு பெற்றோர்கள் இல்லாமல் தன் மனைவி-பிள்ளைகள் மாத்திரம் வெளிநாட்டு வாழ்க்கையை கழிப்பார்கள் என்றால் அது சாபத்திலும் பெரும் சாபமே என்று கூறி எனது கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன். யாவற்றையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
தகவல் : சத்தியமார்க்கம்