கணவரை மகிழ்விப்பது எப்படி?

கணவரை மகிழ்விப்பது எப்படி?கணவரை மகிழ்விப்பது எப்படி?
(அல்–குர்ஆன் மற்றும் ஹதீஸ்ளின் நிழலில் – அனைத்து பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்)
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்கு (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியில் இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ கணவன் வீட்டிற்கு வரும் போது அவரை கணிவான வார்த்தைகள் கூறி அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

• முகமலர்ச்சியுடன் புன்முறுவலுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

• உங்களை சுத்தமாக அழகுபடுத்தி, கணவருக்குப் பிடித்த நறுமணங்களை பூசிக்கொள்ளுங்கள்.

• சந்தோஷமான செய்திகளை முதலில் கூறுங்கள், கவலையான செய்திகள் இருந்தால் கணவர் அமைதி அடையும் வரை அதை கூறாமல் பிற்படுத்தி வையுங்கள்.

• அன்பான, கணிவான வார்த்தைகளை உங்கள் கணவரிடம் பயன்படுத்துங்கள் (வேலையில் அல்லது வீட்டுக்கு வரும் போது ஏதாவது பிரச்சினைகளைச் அவர் சந்தித்திருக்கலாம்).

• கணவருக்காக அக்கறையுடன் பாசத்துடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் முறையாக பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து சாப்பிடும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

இனிமையான குரலும் அவசியமான கனிவும்

• உங்கள் கணவரிடத்தில் மென்மையான குரலில் அழகாக, பணிவுடன் அன்பாக பேசுங்கள். மேலும் மஹ்ரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து நெழிந்து பேசக் கூடாது என்பதையும் மறந்து விட வேண்டாம். உங்கள் கணவரிடத்தில் ஹ்ம்!! இல்லை!! தெரியாது!! என்று கூறி அவரது பேச்சை உதாசீனப்படுத்த வேண்டாம்.

நறுமணமும் அலங்கரிப்பும்

• உடலை அழகு-ஆரோக்கியமாக சுத்தமாக வைத்துக் கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (இல்லற வேலைகளை வேலையாட்கள் அல்லது இயந்திரங்களின் உதவி இன்றி முடியுமான வரை நாமே செய்ய முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைத்துக் கொள்ளலாம்)

• உங்களது கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய நறுமணமுள்ள ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

• தினமும் குளித்து உடலை சுத்தமாக நேர்தியாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடியுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்கு அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.

• வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன் உங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான அசுத்தமான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்து அலங்கோலமான நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

• தடுக்கப்பட்ட ஹராமான முறைகளில் அலங்கரித்துக் கொள்ளக் கூடாது. (உதாரணமாக புருவத்தை மழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி (விக்) வைத்துக் கொள்ளுதல்)

• கணவனுக்கு பிடித்தமான நறுமணங்கள், ஆடைகள், அணிகலங்களைப் பயன்படுத்துங்கள்.

• தலை முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், ஆடையின் வண்ணம் மற்றும் மாடல், அணிகலங்கள் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். மஹ்ரம் இல்லாத ஆண்களுக்கு முன் இது போன்ற விடயங்கள் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

• நபிகள் நாயகம் (ﷺ) அவர்களிடம் வினவப்பட்டது: ‘அனைவரையும் விட எந்தப் பெண் (மனைவி) சிறந்தவள்?” அதற்கு நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது எந்தப் பெண் அவனை மகிழ்விப்பாளோ, கணவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்பணிந்து நடப்பாளோ, தன் விடயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பம் இல்லாத எந்தப் போக்கையும் செய்யமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”. ( நஸயீ)
இனிய இல்லற வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
• திருமண பந்தத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தேவைளை (அனுமதிக்கப்பட்ட முறையில்) பரிபூரணமாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும் என நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ)
• கணவன் தாம்பத்தியத்திற்காக தன் மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி காரணமின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது சினம் கொண்டு அவ்விரவைக் கழித்தால், காலை விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக் கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
• நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்: கணவன் ஊரில் இருக்கும் போது கணவனின் அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமழான் அல்லாத நபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவனின் அனுமதியின்றி யாரையும் அனுமதிக்கக் கூடாது. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).

• உங்கள் கணவருக்கு தாம்பத்திய-உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் காணப்படுமாயின் அதனை முதன்மைப் படுத்துங்கள். (பிறர் ஏதாவது கூறுவார்கள் அல்லது தவறாக எண்ணுவார்கள் என்று தள்ளிப்போடாதீர்கள்).

• உங்களுடைய உடல் மற்றும் ஆடைகளை எப்போதும் சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• கணவருடன் இனிய மொழியில் காதல் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்ப மற்றும் ஏனைய பிரச்சினைகளை மறந்து கூட அச்சந்தர்பத்தில் வெளிப்படுத்தாதீர்கள். ஏனெனில் அது சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக மாற்றி விடக்கூடும்).

• உங்கள் கணவர் திருப்தி அடையும் வரை அவருக்கு ஒத்துழையுங்கள்.

• சந்தோஷமான அவசியமான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பிய போது அல்லது கணவருக்கு அமைதி நிம்மதி தேவை என்னும் பட்சத்தில்).

அல்லாஹ் (ﷻ) அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது

• உங்களுடைய கணவர் வசதியற்ற ஏழையாகவோ அல்லது சாதாரண வேலை அல்லது வியாபாரம் செய்பவராக இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்து விடாதீர்கள். (அடுத்தவர்களின் கணவர்களைப் போல் நீங்கள் இல்லையே என ஒப்பீடு செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள் மீது வெறுப்பை உருவாக்கும்).

• ஏழைகள், அங்கவீனர்கள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், நல்லொழுக்கம், நற்பண்பு, கல்வியறிவு போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களின் நிலமைகளைப் பார்த்தேனும் அல்லாஹ் (ﷻ) நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி கன்னியமாக வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

• கணவருக்கு நீங்கள் அளிக்கும் தன்னம்பிக்கை, ஊக்கம், ஒத்துழைப்பும் தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.

உலக விடயங்களில் மூழ்கி விட வேண்டாம்

• இவ்வுலக வாழ்க்கை மட்டும் தான் நமது நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.

• இதன் அர்த்தம் அல்லாஹ் (ﷻ) நமக்கு அனுமதித்த இன்பங்களை, அருட்கொடைகளை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் இன்பமான வாழ்வுக்கு எதிரான விடயங்களை கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும்.

• உங்கள் கணவரின் செலவை குறைக்கச் சொல்லி அதற்கான யோசனைகள் வழிமுறைகளைக் கூறி அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு ஸதகா கொடுக்கவும் ஆர்வம் ஊட்டுங்கள்.

• அநாவசியமான பொருள்களை வாங்கிக் கேட்டு கணவரை நச்சரிக்காதீர்கள். (உங்களது பெற்றோர்கள் வீட்டில் கிடைத்ததைப் போல் கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்).

• சொத்துக்களும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நற்காரியங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)
கணவனின் உதவி, ஒத்தாசைகளை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
• ‘அதிகமான பெண்கள் தன் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே கணவன் செய்த உதவிகள் பணிவிடைகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

• உங்கள் கணவரின் உதவிகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் போது உங்கள் கணவர் உங்களுக்காக மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பல வழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் நீங்கள் காண்பீர்கள்.

• உங்கள் கணவரின் உதவிகளுக்கு நீங்கள் நன்றி கூறுவதை மறக்கும் போது அல்லது மறுக்கும் போது, உங்கள் கணவர் ‘ஏன் இவளுக்கு இன்னும் நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத் தானே நொந்து கொள்வார்”.

உறுதுணையும் உதவியும்

• ஏதேனும் விபத்தின் காரணமாக உங்கள் கணவர் ஊனம் ஏற்பட்டு விட்டால் அல்லது வியாபாரத்தில் வேலைகளில் நஷ்டமடைந்து விட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு ‘தோள்” கொடுங்கள். இருவரும் இணைந்து உங்களது குடும்ப வாழ்க்கையை கட்டியெழுப்புங்கள்.

கட்டுப்படுதல்
• ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (பரிபூரணமாக) தொழுது, (ரமளான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக் கொண்டு (இறை கட்டளைகளுக்கு மாற்றமில்லாத விடயங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாசல் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் நவின்றார்கள். (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)
• ஒருவர் மற்றொருவருக்கு தலை வணக்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடி இருந்தால் மனைவியை தன் கணவனுக்கு தலை வணங்க (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிp, இப்னுமாஜா, பைஹகி)

• இறைவனுக்கு மாற்றமாக இல்லாத கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள். ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவர் தலைவன் என்பதையும் மனைவி தலைவி என்பதையும் மனைவியின் கடமை கணவனுக்கு உதவி செய்வது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)

• கணவரை எது கோபப்படுத்துமோ முதலாவதாக அதை தவிர்த்து விடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போது அவரை அன்பாக சமாதானப் படுத்துங்கள்.

• நீங்கள் பிழை செய்திருந்தால் மனமுவந்து மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் அள்ளி வீசும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள் தான் விவாகரத்தில் முடிகின்றது என்பதை அனைவரும் அறிவார்கள்).

• கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து தௌிவாகவும் பணிவாகவும் சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் பிரச்சினைகள் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் பணிவாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

• வெளி விடயங்கள் காரணமாக கோபமாக இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த, சாந்தப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில், வியாபாரத்தில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

• அவருடைய பிரச்சினை, சிக்கல்களை அறிந்து கொள்ளும் ஆவலில் அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்.

• ‘என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித் தான் ஆக வேண்டும்;” என்றோ அல்லது “இப்போ இந்தக் கோபத்திற்கு காரணம் என்ன? என்று எனக்கு தெரிந்து தான் ஆகவேண்டும்” என்றோ அல்லது “நீங்கள் எதையோ என்னிடம் மறைக்கின்றீர்கள்! அதைத் தெரிந்து அறிந்து கொள்வதற்கு எனக்கும் முழு உரிமை இருக்கின்றது!” என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்ற முயற்சிக்காதீர்கள்.

பாதுகாப்பது (அவர் வீட்டில் இல்லாத போது)
• இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:31)
• அல்லாஹ் (ﷻ) கூறுகின்றான்: நல்லொழுக்கம் உள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விஸ்வாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

• தடுக்கப்பட்ட நட்புகளை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• குடும்ப இரகசியங்களை அடுத்தவர்களிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்திய விடயங்கள் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் கூற விரும்பாத விடயங்கள்)

• வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கணவனுடைய சொத்துக்களையும், பணத்தையும் பாதுகாத்து வையுங்கள்.

• கணவனுடைய அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். அப்படியே உங்கள் கணவர் வௌியே செல்வதற்கு அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளியே செல்லுங்கள்.

• உங்கள் கணவருக்குப் பிடிக்காத, விருப்பமற்றவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள். கணவரின் அனுமதியின்றி வீட்டின் எந்தப் பொருளையும் யாருக்கும் கொடுக்காதீர்கள்.

• நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் மஹரம் இல்லாத ஆண்களை அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், பெரியப்பாவின் அல்லது சாச்சாவின் மகன்கள், பெரியும்மாவின் அல்லது சாச்சியின் மகன்கள், – தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்)

• கணவர் வீட்டில் இல்லாத சந்தர்பங்களில் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

பொறுமையும் பாதுகாப்பளித்தலும்

• கஷ்டங்கள், துயரங்கள் எதிர்கொள்ளும் போது பொறுமையுடன் இருங்கள். வாழ்க்கையில் இழப்புகள், துன்பங்கள், துயரங்கள், சோதனைகள் (உங்களுக்கு, அல்லது உங்கள் கணவருக்கு, பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடி பொறுமையை கடைபிடித்து பிரார்தனை செய்வது அவசியம். (உதாரணமாக : நோய்கள், விபத்துகள், நஷ்டங்கள், இறப்புகள்…)

• அழைப்புப் பணியில் துன்பங்கள், துயரங்கள் ஏற்படும் போது (சிறை பிடிக்கப்படுதல், அவமானபடுத்தப் படுத்தல் ஊனமாக்கப்படுதல் …) பொறுமையுடன் அமைதியாக இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வின் பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப் படுத்துங்கள்.

• உங்கள் கணவர் உங்களிடம் மோசமாக, கடுமையாக நடந்து கொண்டால் கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக பண்பாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம் மீது இவ்வளவு அன்பும், மரியாதையும் பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக அன்பாக, கனிவாக நடந்தக் கொள்ளக் கூடாது என்று நினைத்து மனம் வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

இறைவனுக்கு அடிபணிதல் மற்றும் அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்

• கடமையான மற்றும் நபிலான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள். இரவு தொழுகை தொழுவதற்கு அவருக்கு ஆர்வமூட்டுங்கள். உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள்.

• அல்-குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும், கணவருடன் இணைந்தும் ஈடுபடுங்கள். இஸ்லாமிய சொற்பொழுவுகளை தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய விடயங்களை ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).

• சுப்ஹ {தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ருகளில் ( காலை, மாலை மவ்சூறாஹ்) ஈடுபடுங்கள்.

• பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப் பணிகளில் உங்களையும் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.

• இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்கு அவசியமான நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு அவைகளை செயல்படுத்துங்கள்.

• உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக ஒத்துழைப்பாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளை, யோசனைகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

• அவசியமான நேரத்தில் தேவையான அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வத்தையும், தைரியத்தையும் வழங்கி நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நலமுடன் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.

அழகிய வீட்டு பராமரிப்பு

• வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

• பொழுது போகாத நேரங்களில் வீட்டுப் பொருட்களை சீர்படுத்தி நேர்தியாக வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த, செய்த அலங்காரப் பொருட்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிகவும் சந்தோஷம் அடைவார்).

• தரமான ஆரோக்கியமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுங்கள்.

• பிள்ளைகளை எப்படி இஸ்லாமிய பாதையில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதை கற்று அதனை செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.

குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்

• கணவருடைய பணத்தை, சொத்துக்களை அவருடைய அனுமதியின்றி செலவழிக்காதீர்கள். (அது தர்மம் ஸதகாவாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு சம்மதிப்பார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

• கணவன் வீட்டில் இல்லாத போது வீடு, வாகனம் போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• பிள்ளைகளை சுத்தப்படுத்தி நல்ல உடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். பிள்ளைளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விடயங்களில் கவனம் செலுத்தி நற்பண்புகள், இஸ்லாமிய மார்க்க அறிவு, நபிமார்களின் வரலாறுகள், நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் கற்பித்துக் கொடுங்கள்.

நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி

• நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித் தோழியர்களான கதீஜா (رضي الله عنها), பாத்திமா (رضي الله عنها), ஆயிஷா (رضي الله عنها), உம்மு ஸலமா (رضي الله عنها), உம்முசுலைம் (رضي الله عنها) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

• கெட்ட பெண்களை அல்லது சினிமா நடிகைகளைப் பின்பற்றுவதையும், பார்ப்பதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.

• கணவருக்கு சமயோசிதமான முடிவுகள் தேவைபடும் போது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

எப்பொழுதுமே கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
• தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் ஒரு பெண் மரணித்து விட்டால் அவள் சுவர்க்கத்தில் நுழைவாள் என நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)
இல்லறம் – அன்பும் பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க!

திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாறுவதற்கு ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பம் துயரங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதலும் நிம்மதியும் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் எதிர் பாலியல் கொண்டவர்களை இணைப்பது இந்த திருமண பந்தத்தின் மூலமாக மட்டுமே ஆகும். இஸ்லாம் மார்க்கம் இந்தத் திருமண பந்த இணைப்பை மிக அதிகமாக அழகிய முறையில் வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் பாக்கியங்களும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21)

இஸ்லாம் வலியுறுத்தும் இத் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான வழிகெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரம் போன்ற அனாச்சாரங்களில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. மனிதன் இயற்கையாகவே ஆசாபாசங்களில் மற்றும் ஏனைய கெட்ட விடயங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் என்பவன் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித் தலைகுனியக் கூடிய மாபெரும் பாவமாகிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

ஷைத்தானைப் போலவே பெண் (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் உடனே செல்லட்டும், ஏனெனில், மற்ற பெண்களிடம் உள்ளது போன்றே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை, ஆசையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)

இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் பிள்ளைகள், வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. முறையான திருமண உறவு முறையின் மூலமாக பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்கள் ஆகின்றோம்.

அபூஹுரைரா (رضي الله عنه) அவர்கள் கூறுகின்றார்கள் : நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள், “திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் (மறுமை நாளில்) நான் ஏனைய சமுதாயங்களைக் விட என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண விரும்புகின்றேன்.” (பைஹகி).

இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் முக்கியமான நோக்கம் இவை தான். எனினும், இதை தவிர இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து உள்ளன.

அதாவது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், அன்போடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்தும் தீங்குளிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்மின்றி இருவரும் இல்லற வாழ்க்கையை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல விடயங்களை இணைந்து செய்வதற்கான சூழலும் வாய்ப்பும் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது.

இருவரினதும் அன்புப் பிணைப்பின் மூலம் இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட அழகிய சமுதாயமாக, பாதுகாப்பு உணர்வு கொண்ட பலமிக்க சமுதாயமாக பரிணமிப்பதுடன் அங்கு பழக்க வழக்கங்கள் மற்றும் நன்னடத்தையும், சமூக மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது.

துரதிருஷ்டவசமாக, ஏனைய சமுதாயங்களைப் போலவே இன்று முஸ்லிம் சமுதாயத்திலும் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலையான விடயமாக உள்ளது

இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் பிரதேசங்களில் இவ்வாறான விவாகரத்துக்கள் அதிகம் இல்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் கூறிய திருமணத்தின் காரணமாக ஏற்படக் கூடிய நன்மைகள் பயன்கள் தானாக உருவாகி விடுவதில்லை. மாறாக,

அன்பு, ஒழுக்கம், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், ஒத்துழைப்பு, இன்னும் ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்தி அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு, விட்டுக் கொடுப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளையும், பிரதிப் பலன்களையும் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் உருவாகி விடுவதில்லை. அனைத்திற்கும் நமது முயற்சி அவசியமானதாக இருக்கின்றது.

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல,

“உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;” (அல்குர்ஆன் 30:21)

கணவன் மனைவிக்கிடையே காதலும், அரவனைப்பும் கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் இல்லாமல் போய் விட்டது என்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்காக அங்கு கருணையும், புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையும், இருவருக்கும் இடையே அந்யோன்ய தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும்.

இவை மூலம் விடைபெற்றுச் சென்ற, இல்லாமல் போய் விட்ட காதலும், கனிந்துருகச் செய்யும் காதல் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாக அமையும். ஊடலுக்குப் பின் கூடல் என்பது தான் உறவை இருகப் பற்றிக் கொள்ளச் செய்யும் சாதனமாகும்.

இல்லற தம்பதிகள் சந்தோஷமாக வாழ்வதானது அது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது பிள்ளைகளுக்கும், உங்களது பெற்றோர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் விடயமாக இருக்கின்றது.

நீங்கள் உங்களுக்கிடையே புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது பிள்ளைகளும் அத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் அதனைக் கடைபிடித்து நடப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும்.

இன்னும் அமைதியான சூழ்நிலைகள் காணப்படக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் இன்பமான வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விடயமுமல்ல, இதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமும் கிடையாது, உங்களது பழக்க வழக்கங்களில் சற்று மாற்றங்களை காண்பித்தாலே போதும், இல்லற வாழ்வில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :

ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பது

உங்களின் திருமணம் வெற்றிகரமான திருமண வாழ்க்கையாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள், கடமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக நன்கு அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து பொருப்புடன் நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கணவனின் மீது காணப்படும் உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கு (தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள்) அவசியமான வாழ்வியல் தேவைகளை அதாவது, உணவு, உடை, வாழ்விடம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதார நிலையை திரட்டிக் கொடுப்பது.

இன்னும் குடும்பத் தலைவன் என்ற வகையில் குடும்பப் பராமரிப்பு விடயங்கள், மார்க்க வழிகாட்டுதல்கள், குடும்ப உறுப்பினர்களின் ஒழுக்க, பண்பாட்டு, கல்வி விடயங்களில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை அனைத்தும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாக காணப்படுகின்றது.

மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் தனக்கு அனுமதித்துள்ள கட்டளைகளை, வரம்புகளைப் பேணுவதும், அதற்காக தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு அழகிய முறையில் நடப்பதும், குடும்பப் பராமரிப்பு மற்றும் பிள்ளை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது முதன்மையான கடமைகளாக இருக்கின்றது.

இன்னும் பல பொறுப்புக்கள், கடமைகளை நிறைவேற்றக் கூடியவளாக மனைவி இருந்தாலும், மேலே கூறியவைகள் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது.

இவற்றை அவள் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், அந்தக் கணத்திலிருந்து அக் குடும்பத்தில் குழப்பங்கள், சச்சரவுகள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பத்தில் அமைதி நீங்கி குடும்ப வாழ்வு சீரழிய ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலையில் அங்கு அன்பு, கருணையை அழிந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் அழித்து விடும்.

எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்கு உரிய கடமைகள் பொருப்புக்கள் என்னவென்பதை ஆராய்ந்து, தெறிந்து அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

ஒருவர் அடுத்தவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த காதல், அவர்களது மனதைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மென்மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லற வாழ்வு மாறவும் வாய்ப்பு ஏற்படும்.

தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்

இன்றைய உலகமானது அவசர உலகம் ஆகும். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரம் இல்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் அந்த 24 மணி நேர அட்டவனைக்கிடையில் உங்கள் மனைவிக்காகவும் சில நிமிடங்களையாவது ஒதுக்குங்கள். அதில் மனைவியுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவசியமில்லாத அதிக முக்கியத்துவம் இல்லாத எத்தனையோ பல விடயங்களுக்காக நாம் எமது நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் நம்முடன் இணைந்த மனைவியுடன், வாழ்நாள் முழுவதும் எம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய மனைவிக்காக சில நிமிடங்களையேனும் செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.

காலையில் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்வது, அடுத்து வேலைக்கு அல்லது வியாபாரத்திற்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, அத்துடன் அடுத்தடுத்த தன் வேலைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், தன் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றியும் சற்று சிந்திப்பது நல்லது.

இன்று பணம் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. எல்லாவற்றுக்கும் பணம் தான் முக்கியம் என்ற மனநிலை மக்கள் மனதில் தீரா நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனித உணர்வுகளை பணத்தின் மூலம் திருப்திபடுத்திட முடியாது என்பதைப் புரியாதவர்களாக, அறியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டார்கள்.

இதிலிருந்து விடுபட்டு வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் சரியான முறையில் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் நேர முகாமைத்துவம் என்பது அவசியம். வேகமான கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உங்களது சில நேரத்துளிகளை ஒதுக்கி வாழும் போது, பணம் கொடுத்து வாங்க முடியாத சுகத்தையும், உங்களது அருகாமையும், அரவனைப்பும் அவர்களுக்கு வழங்கும்.

அதிகாலை சுப்ஹ் தொழுகைக்குப் பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு உணவிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை உங்கள் வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தளவு பரபரப்பான, பிஸியானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது எதிர்பார்ப்புகளையும், உணர்வுகளையும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களுக்கும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறையும், கரிசணையும் கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும். மனித உணர்வுகள் தான் மனிதனை உயரத்திற்கு கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை கீழ் நிலைக்கும் கொண்டு செல்லும்.

கவனிப்பு அல்லது அக்கறை

உங்களது திருமண பந்தம் இல்லற வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் அடுத்தவவர் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.

சற்று தாகமாக உள்ளது என்று உங்களது மனைவி கூறினால், உடனே சென்று ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொண்டு வந்து மனைவிக்கு கொடுங்கள். இல்லை, உங்களது கணவர் வந்து ரொம்ப களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவரது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள்.

எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் அமைதியாகும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளை பணிளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு வேலைகளுக்கு இடையூறாக இல்லாமல், அவரது சிரமங்களை, கஷ்டங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்கு உண்டான ஊக்கத்தை, தைரியத்தை, ஆலோசனைகளை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.

ஒருவர் மற்றவரது வேலைகளின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவத்துடன் இருவருக்கிடையே அன்னியோன்யமான இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை இன்னும் வலுப்படுத்தும்.

அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பது

தம்பதியர்களுக்கு இடையே பிரச்னை உருவாகுவதற்கு முக்கிய காரணம் இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமை ஆகும். அதாவது உங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள அவசியமான பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.

நீங்கள் உங்கள் இருவருக்கிடையே கதைத்து உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் குடும்பத் தம்பதிகளாக வாழ்கின்றீர்கள், அவள் எனது மனைவி, இவன் எனது கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும்.

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் கதைக்கும் பொழுது உரத்த குரலில் சப்தமிட்டு, பேசுகின்றீர்களா? அல்லது மிகவும் மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது அடுத்தவர், அவர் என்ன கூற வருகின்றார் என்பதை நிதானமாக கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் கணக்கில்லாமல் இருக்கின்றீர்களா?

ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி-இவன் எனது கணவன், அவன்-அவள் என்னிடம் அவசியமான பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அவதானத்துடன் அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும்.

அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் அமைதியாக கவனித்து, அதனை முழுமையாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை கூற வேண்டும்.

அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே தவிர கட்டளையிடும் அதிகாரத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல்கள் இல்லாத சுமுகமான மனநிலை உருவாகுவதோடு, உங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு அன்பான புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு, முறன்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

இறைவனிடம் உதவி கேளுங்கள்

உங்கள் இருவரையும் திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், இணக்கத்தையும் பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.

இப்னு மஸ்ஊது (رضي الله عنه) அவர்கள் கூறினார்கள் :

“நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்தில் இருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தான் இடமிருந்து வந்தது, உங்களுக்கு அல்லாஹ் (ﷻ) எதனை ஆகுமாக்கி வைத்து இருக்கின்றானோ அதன் மீது ஷைத்தான் வெறுப்பைத் திணிக்கின்றான்…எனவே, உங்கள் மனைவி மீது உள்ள அன்பு குறைகின்றது என்றால், நீங்கள் அல்லாஹ்வின் (ﷻ) புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.”

இஸ்லாமிய சமுதாய வாழ்வில் திருமணம் என்பது இன்றியமையாத, தவிர்க்க முடியாத விடயமாகும். அன்றாட கஷ்டங்களிலிருந்தும் வேலை சுமைகளிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் இல்லற பந்தம் இருக்க வேண்டும்.

அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்மையான தென்றலாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் அன்பும், பற்றுதலும் பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான முறையில் புரிந்துணர்வு கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

புயல் வீசுகின்ற தளமாக உங்கள் குடும்பங்கள் இருக்குமென்றால், மேலே கூறிய அறிவுரைகளைச் நடைமுறைப்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளை, மனக்கசப்புகளை களைந்து, கருணை எனும் சிறகை தாழ்த்திப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்விடமே கையேந்துங்கள்.

The over article is a summary of the book “How to make your wife happy” by Sheik Mohammed Abdul Haleem Hamed. English Interpreter brother Abu Talhah, analyst Brother Adam Qurashi of Muslim Students’ Affiliation College of Alberta Edmonton, Canada. Tamil Interpreter (from English) : Mufti, K.S.A.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply