நீங்கள் அலுவலகத்தில் இருந்தாலும் சரி வீட்டில் இருந்தாலும் சரி, உங்களுக்கு ஏதாவது வேலை செய்ய மனமில்லையென்றால், உங்களுக்கே அது பெரும் சிரமாக மன உளச்சலாக மாறிவிடும்.
1. நன்றாக தூங்காமல் இருப்பது
சில காரணங்களால் வழமையான தூக்கத்தை விட நீங்கள் குறைவாக தூங்கினால், ஒரு நாளை ஒதுக்கி, அன்றைய தினம் நன்றாக தூங்குங்கள்.
அப்படி தூங்கும் போது அல்லது அப்படி ஒரு நாள் ஒதுக்குவது சிரமமாக இருந்தால், இரவில் தூங்கும் போது எந்தவொரு விடயத்தைப் பற்றியும் யோசிக்காதீர்கள் அல்லது மனதளவில் பிரச்சனைகளை பற்றி யோசிக்காதீர்கள்.
கண்களை மூடியவுடன் ஏற்படும் கருமை, அந்த கருமையில் உள்ள சுதந்திரம், மூச்சு விழும் விதம், சுவாசிக்கும்போது நெஞ்சு அல்லது வயிறு ஏறி இறங்கும் விதம் போன்றவற்றில் மனதை ஒருமுகப்படுத்தி உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
சிறு குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 16 மணிநேர தூக்கம் தேவைப்பட்டாலும், குழந்தைகளின் வேலையே அவர்கள் தூங்காமல் நம்மை அல்லோகலப்படுத்துவதாகும். இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 9 மணிநேர தூக்கமும், பெரியவர்களுக்கு குறைந்தது 8 மணிநேரமும் தூக்கம் தேவை.
2. குறைவாக உண்பது
டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு போஷாக்கான உணவுகளை எல்லாம் துறந்து பட்டினியில் கிடந்தால் கடமைகளை செய்வது எப்படிப் போனாலும் உயிர் வாழக்கூட உடம்பில் தெம்பிருக்காது.
டயட் என்பது எல்லா உணவையும் சாப்பிடாமல் இருப்பது அல்ல. கொழுப்பு, சர்க்கரை போன்ற கலரி அதிகமான உணவுகளைத் தவிர்த்து, அன்றைய நாளுக்குத் தேவையான போஷாக்கான உணவுகளை மட்டும் உண்பதாகும்.
மேலும், காலையில் தாமதமாக எழுந்து அலுவலகத்திற்கு விரைந்து சென்றால், காலை உணவையும் தவறவிடலாம். தலைவலி, உடல் சோர்வு போன்ற பல காரணங்களுக்கு காலை உணவு கிடைக்காமல் போவதே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. தாமதாகும் நாட்களில் குறைந்தது ஷோட் ஈட்ஸ் ஏதாவது சாப்பிடுவதற்கு மறந்திட வேண்டாம்.
3. அதிகமாக உண்பது
சாப்பாட்டு ராமன் போல் கண்டதெல்லாம் சாப்பிட்டு விட்டு மூச்சு விடக் கூட முடியாத நிலையில் எங்கே வேலைளை செய்வது.
அதன் பின் 2 மணி மணியளவில் செமயாக தூக்கம் ஒன்றும் வரும். அதன் பின் என்ன ஒபீஸ், வேலை செய்யும் இடம் என்று பாராமல் ஒரு தூக்கம் போட வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியும் நீங்கள் சோர்வாக இருக்கும்போது அதிகமாக சாப்பிட்டால், தூக்கம் மற்றும் சோர்வு ஏற்படுவது சகஜம் தான், ஏனெனில் மலையளவு சாப்பிட்ட அந்த உணவை ஜீரணிக்க உடலும் கடினமாக உழைக்க வேண்டுமல்லவா.
வயிறு நிரம்ப அதிகமாக சாப்பிட்டதும் மனதளவிலும் உடலவிலும் சிறு போதை தன்மை ஏற்படுவதால் (தூக்க மஸ்து) எதிர்காலக் கனவுகளை மறந்து உறக்கத்தில் சில கனவுகளைக் காணத்தான் முடியும்.
இனிப்பு அதிகம் உள்ள ஸ்நாக்ஸ் மற்றும் குளிர் சாதனப் பானங்கள் நமக்கு உனடியாக சக்தியை கொடுப்பது போல் தெரிந்தாலும், சீக்கிரத்தில் சக்தி குறைந்து, சோர்வு ஏற்படும். மேலும் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இதனால் உடல் சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவில் உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்பு சத்து மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படும் கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்தப்படும். இதனால் நீங்கள் மந்தமாக மாறிவிடுவீர்கள். அடுத்த வேலை செய்வதற்கே மிக மெதுவாகத்தான் செயல்படுவீர்கள்.
காஃப்பைன் கலந்த பானங்கள் உடனடியாக புத்துணர்வை தரலாம். ஆனால் இதை நாம் அடிக்கடி குடிக்கும்போது, தூக்கத்தை பாதிக்கும்.
இதனால் ஏற்படும் பக்க விளைவுகள், கடும் சோர்வை ஏற்படுத்தும். இதுபோல காஃபைன் கலந்த உணவுகளை எடுத்துகொள்ளும் போது, வரட்சி ஏற்படுத்தமால் இருக்க தண்ணீர் பருக வேண்டும்.
4. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது
தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் உள்ள கழிவுகள் நன்கு வெளியேறி, உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. தண்ணீர் நன்றாகக் குடிப்பது வெளிப்புறத் தோற்றத்தையும் பாதிக்கிறது.
அதிக வேலை காரணமாக தண்ணீர் குடிக்க மறந்தால், உங்கள் மொபைலில் வாட்டர் ட்ரிங்க் ரிமைண்டர் (Water Drink Reminder) போன்ற செயலியைப் பயன்படுத்தி, நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவைப் பதிவு செய்து தினசரி அதை பயன்பாட்டில் கொண்டு வரலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இது ஒரு சிறந்த ஊக்கமாகும்.
5. மனக் கவலை
Depression மனச்சோர்வு, மன அழுத்தம் என்பது நமது ஆற்றல் அளவைக் குறைக்கும் ஒரு பெரிய எதிரியாகும்.
உங்களுக்கு பிடித்த விடயம் கிடைக்காமல் போனால், காதல் தோல்விகள், வீடு மற்றும் அலுவலக பிரச்சனைகள், உறவினர்களின் இழப்புகள், பொருளாதார மற்றும் வருமான பிரச்சினைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள் போண்ற விடயங்கள் தலைக்கேறி அதைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கி விட்டால் தானாகவே மன அழுத்தம் ஏற்படும்.
அதன் பிறகு பைத்தியம் பிடித்தவன் போல் கீழே விழுந்து உறங்க வேண்டும் என்று தோன்றுவதை தவிர எந்த ஒரு விடயத்தை செய்யவதற்கும் மனம் இடமளிக்காது. இதற்குச் செய்ய வேண்டிய ஒரே விடயம் கவலைகளை மறந்துவிடும் வகையில் மனதுக்கு பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடுவதுதான்.
அதற்காக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வது போன்ற சிக்கலான வேலைகளை விடுத்து உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் மறந்துவிட்டு போய் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள். சாப்பிடும் போது அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டு மகிழுங்கள். ஒரு இதமான பாடலைக் கேட்டு பாருங்கள், முதலில் ரிலாக்ஸ் ஆகுங்கள்.
அதன் பிறகு உங்கள் வேலையில் இறங்கி அவதானத்துடன் ஆரம்பியுங்கள். ஏனென்றால், ஒரு பிரச்சனையை சரியான நேரத்தில் தீர்க்காமல், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் கடைசியில் வேலைகள் இன்னும் குவிந்துவிடும்.
6. மேலும் நோய்கள்
இவைகளைத் தவிர உங்களுக்கு தொடர்தும் வேலைகளை செய்வதற்கு சக்தி, ஆற்றல் இல்லையெனில், நீங்கள் சோர்வாக காணப்படுகிறீர்கள் எனின் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் குறைக்கும் ரத்தசோகை, தைராக்ஸின் ஹார்மோன் குறைவதைப் பாதிக்கும் தைராய்டு சுரப்பியின் பலவீனம் போன்றவை காரணமாக இருக்கலாம்.
மேலும் காய்ச்சல், வைரஸ், நீரிழப்பு, ஹைப்பர் தைராய்டிசம், மூளையின் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், பிட்யூட்டரி நோய்கள், மோசமான ஊட்டச்சத்து, தூக்க கோளாறுகள், மூளை காயம், பக்கவாதம் போன்றவற்றாலும் சோம்பல் உண்டாகலாம்.
எனவே, இதுபோன்ற நிலைமைகள் காணப்படின், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.