ஒரு பிள்ளையை வளர்ப்பது என்பது மிகப்பெரிய பொறுப்புகளில் ஒன்றாகும். எந்தவொரு பிள்ளைக்கும் முதல் ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் சொந்த வீடாகும், அவர்களின் எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகள் போன்ற பல விடயங்கள் அந்த பெற்றோரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்வதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
பிள்ளைகள் நல் வழியில் சென்றால், அதன் கௌரவம் பெற்றோருக்கு கிடைப்பது போல் பிள்ளைகள் மோசமான பாதையில் சென்றால் அதன் பழியும், தவறும் பெற்றோர்கள் மீது தான் விழுகிறது. அதனால் தான் அந்த பொறுப்பை சிறப்பான முறையில் நிறைவேற்ற அனைவரும் முயல்கிறார்கள்.
பெற்றோர்கள் என்ற வகையில் தமது பிள்ளைகளை வளர்க்கும் முறை ஒருவருக்கொருவர் வேறுபட்டாலும் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகள் ஒரு நாள் தமக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும் குடிமக்களாக மாறுவதை விரும்புகிறார்கள்.
எனவே, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பெற்றோர்களுக்கு அவர்ளை அறியாமல் நடக்கக் கூடிய சில தவறுகள் அல்லது ஒரு சில குறைபாடுகளைப் பற்றி இங்கு பார்கலாம். பெற்றோராகிய நீங்களும் இவற்றைச் செய்கிறீர்கள் என்றால், மீண்டும் யோசித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.
01. அலட்சியம் அல்லது புறக்கணிப்பு
எந்தப் பெற்றோரும் வேண்டுமென்றே தங்கள் பிள்ளைகளை கெட்ட எண்ணத்துடன் புறக்கணிப்பதில்லை அல்லது அலட்சியம் செய்வதில்லை. ஆனால் வேலைப் பளுவான வாழ்க்கை, வீட்டு வேலைகள் மற்றும் சமூகப் பொறுப்புகள் போன்றவற்றால் பிள்ளைகளை அலட்சியமாக, புறக்கணிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நாம் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளா விட்டாலும் அது பிள்ளைகளின் வாழ்க்கையை மிகவும் மோசமாக பாதிக்கக் கூடும்.
இதன் மூலம் சிறுவயதில் கவனத்தில் கொள்ளப்படாத பிள்ளைகள் எதிர்காலத்தில் சுயமரியாதை குறைந்த தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளைகளாக சமூகத்தில் விடுவிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் நல்ல மன நிலை இல்லாதவர்களாக வாழலாம். சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கவனக்குறைவால், வாழ்நாள் முழுவதும் நல்ல உறவைப் பேணும் திறனை இழந்துவிடுகிறார்கள்.
எனவே, உங்கள் குழந்தைகளை நீங்கள் உங்களது கவனக்குறைவால் புறக்கணித்திருந்தால், அவர்கள் எப்போதும் உங்களால் நேசிக்கப்படுவதையும் கவனித்துக்கொள்வதையும் உணரச் செய்யுங்கள். அவர்களுடன் அடிக்கடி பேசி உங்களின் உறவை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
02. தவறான உதாரணங்களை வழங்குதல்
ஒவ்வொரு பிள்ளையும் தன் பெற்றோரைப் பார்த்துதான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றது என்று நாம் ஆரம்பத்தில் கூறினோம். எனவே பெற்றோர்களாகிய நீங்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால், திருடுவது, போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற பல கெட்ட விடயங்களை உங்கள் குழந்தைகள் முன்னிலையில் செய்தால், வாழ்க்கை இது தான் என்று கற்றுக் கொள்வது அவர்கள் பார்ப்பதில் இருந்து தான். சில வேளை சில விடயங்கள் அவ்வளவு பெரிய கெட்ட பழக்கமாகவும் இருக்காது. ஆனால் அன்றாட வாழ்க்கையில் கெட்ட வார்தைகளை பாவித்தல், சண்டைகள் போன்றவைகளும் பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு கிடைக்கக் கூடிய கெட்ட பழக்க வழக்கங்களாகும்.
உங்களுக்குள் எப்போதும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் பார்க்கும் வகையில் அந்த விடயங்களைச் செயல்படுத்துங்கள். பிள்ளைகள் எப்பொழுதும் பார்த்து கற்றுக் கொள்ளும் விடயத்தை சரியாக செய்வார்கள்.
03. முறையற்ற பக்கசார்ப்பு
இங்கு கூறப்போவது வீட்டின் செல்லப் பிள்ளைப் பற்றியது. பெற்றோருக்கு தன் எல்லா பிள்ளைகளும் ஒன்று தான். ஆனால், அவ்வப்போது வீடுகளில் பெற்றோர்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு பிள்ளை இருப்பதை நாம் பார்த்திருப்போம். எனவே அத்தகைய வீட்டில் கவனிபை பெறாத மற்ற பிள்ளை அல்லது பிள்ளைகள் பிற்காலத்தில் மனச்சோர்வு, விரக்தி போன்ற கடுமையான நிலைமைகளால் பாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி சகோதரர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டு அது எல்லா பிள்ளைகளையும் பாதிக்கலாம்.
எனவே, முடிந்தவரை, பிள்ளைகளிடையே நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அவர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்துங்கள்.
04. தேவையற்ற கட்டுப்பாடு
தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பது பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ஒருபோதும் நல்லதல்ல. பிள்ளைகள் தவறான முடிவுகளை எடுக்கும் சந்தர்பங்களில் பெற்றோர்களுக்கு தமது வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக அதனை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தலையிட்டு சரியான முடிவுகளை எடுப்பதற்கு பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் இங்கு குறிப்பிடப் போவது அதுவல்ல.
தம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போன கனவுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளை தனது பிள்ளைகளின் மூலம் அடைந்து கொள்ள முயற்சிப்பது பிள்ளைகளின் முடிவுகளை தேவையற்ற முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றது.
தன்னுடைய பிள்ளைகள் தான் என்றாலும் அவர்கள் சிந்திக்கும், செயல்படும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்.
அதனால் பிள்ளைகளுக்கு அவர்களின் வழியில் செல்வதற்கான வழிகாட்டுதல்களையும், உந்துதலையும் வழங்குவதை விடுத்து அவர்களை கட்டுப்படுத்த முயற்சிப்பது புத்திசாலித்தனம் அல்ல.
05. உடல் அல்லது வாய்மொழி துஷ்பிரயோகம்
இந்த வார்த்தை சற்று பாரதூரமானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்போதாவது துஷ்பிரயோகம் செய்வார்களா? என்று ஆச்சரியப்படலாம். இதற்கான பதில் “ஆம் எம்மை அறியாமலே செய்கின்றோம்”.
இங்கு கூறப் போவது பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் தண்டனைகளைப் பற்றியது. தவறு செய்யும் போது பிள்ளைகளை கடுமையாக திட்டுவதை, அடிப்பதை பற்றியது.
தவறுகள் செய்த சந்தர்பங்களில் தண்டனை கொடுத்து அதனை சரி செய்யாவிட்டால், பிள்ளைகள் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடும் என்பது உண்மைதான்.
ஆனால் அதற்குத் தீர்வு பிள்ளைகளை கடுமையாக திட்டுவதும், அவர்கள் தவறானவர்கள் என்று திட்டி அடிப்பதும் அல்ல. அவ்வாறு தண்டிக்கப்படும் பிள்ளைகள் முன்னர் குறிப்பிட்ட படி நீண்ட கால மோசமான மன நிலை பாதிப்புகளுக்கு உள்ளாகலாம்.
தண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அடிப்பதை, திட்டுவதை தவிர்த்து டிவி பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் அனுமதிக்கப்படும் நேரத்தைக் குறைப்பது, சீக்கிரம் படுக்கைக்குச் செல்லச் சொல்வது, அவர்களால் செய்ய முடியுமான வீட்டு வேலைகளை வாங்குவது போன்ற புத்திசாலித்தனமான முறையில் தண்டிக்கலாம்.
06. அதிக பாசம் மற்றும் குறுக்கீடு
அலட்சியம் அல்லது புறக்கணிப்பை போன்று மோசமான பிரதிபலனை உண்டாக்கக் கூடியது தான் இந்த அளவுக்கதிகமான பாசமாகும்.
தேவையில்லாத அளவுக்கு அதிகமான பாசத்தை பெற்று செல்லமாக வளரும் பிள்ளை வளர்ந்ததும் தனியாக எதனையும் செய்து கொள்ள முடியாத இன்னொருவரை சார்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு தங்கள் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்வதற்கு அனுமதிப்பதும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதும் பெற்றோர், பிள்ளைகள் இருவருக்கும் நன்மை பயக்கும்.
07. பிள்ளைகளை நம்பாமல் இருப்பது
இது முன்னர் கூறிய விடயத்துடன் மிகவும் தொடர்புடையது. தமது விடயங்களை தம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பிள்ளைளுக்குக் கொடுங்கள். அதற்கு முன்னர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் இதைச் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.
மேலும், எந்தவொரு பிரச்சனையான சூழ்நிலையிலும், பெற்றோர்கள் மற்ற தரப்பினர் சொல்வதை கேட்பதைப் போல் தங்கள் பிள்ளைகள் சொல்வதையும் கட்டாயம் கேட்க வேண்டும்.
இவ்வாறு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நம்பிக்கை ஏற்பட்டால் தான், தமது பெற்றோரிடம் எதையும் பேச முடியும் என்ற நம்பிக்கை பிள்ளைகளுக்கும் ஏற்படும்.
பெற்றோர் எரிச்சலடையும் குழந்தைகளின் பொதுவான பழக்கங்கள்