ஆன்லைன் ஷாப்பிங் நன்மைகள்

ஆன்லைன்நாம் வழக்கமாக ஷாப்பிங் செல்வது எப்படி? ஆடை அலங்காரங்களை அணிந்து கொண்டு ஒரு பையையும் பணத்தை எடுத்துக் கொண்டு, கடைக்குச் செல்கின்றோம்.
ஒரு கடை என்று அழைக்கப்பட்டாலும், இது ஒரு பல்பொருள் அங்காடி அல்லது வணிக வளாகமாகவும் இருக்கலாம். அதனால் அங்கு சென்று நமக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து பார்த்து வாங்குகிறோம். அவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வாருகின்றோம்.
ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நிலமை வேறு. ஆடை அலங்காரம் ஒன்றுமில்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல அவசியமில்லை. பணம், பை கொண்டு செல்வதற்கும் அவசியமில்லை.

கணினி அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் உள்ள App மூலம் ஆன்லைனில் பொருட்களை விற்கும் கடைக்குச் சென்று உங்களுக்கு என்ன பொருட்கள் தேவை என்று பொருட்களின் படங்கள், தகவல்களைப் பார்த்து அவைகளை ஆன்லைன் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்து, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தி அல்லது கேஷ் ஆன் டெலிவரி மூலம் கொள்வனவு செய்கின்றோம் அவ்வளவுதான்…

முன்பெல்லாம் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய சற்று பயந்தனர். குறிப்பாக சமீபத்திய கொரோனா காலத்தில், சிலருக்கு பொருட்களை வாங்குவதற்கு வேறு வழியில்லாமல் போனது. தற்பொழுது, ​​இலங்கையில் கூட, நீங்கள் நினைக்கும் எந்தவொரு பொருளையும் வாங்கக்கூடிய ஆன்லைன் இடங்கள் உள்ளன.

உண்மையில், ஆன்லைன் ஷாப்பிங் என்பது எதிர்காலத்திற்கும் ஏற்ற ஒரு வர்த்தக முறையாகும். அதனால்தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதன் சில நன்மைகளைச் சொல்லி மக்களை ஊக்குவிக்க நினைக்கின்றோம்.

01. சௌகரியம்

இதை பற்றி விளக்கமாக சொல்வதற்கு அவசியமில்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, ​​​​கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும் போது காணப்படும் களைப்பு உங்களுக்கு இருக்காது. அதே போல் காலம் நேரம் விரயமாகாது. ஏனெனில், மொபைல் மூலமாகவோ அல்லது கணினி மூலமாகவோ எந்தப் பொருளையும் நிமிடங்களில் ஆர்டர் செய்துவிடலாம்.

அதே போல் ஒரு கடைக்குச் சென்றால் நாம் வாங்க நினைக்கும் பொருட்களின் விவரக் குறிப்புகளை கடையில் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் கடையில் உள்ளவர்கள் எதை சொல்கிறார்களோ அது தான் முடிவாக இருக்கும்.

ஆனால் நாம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது, ​​எல்லா விவரங்களும் குறிப்புகளும் ஷாப்பிங் தளத்திலோ அல்லது செயலிலோ கொடுக்கப்பட்டிருப்பதால் எளிதாக இருக்கும்.

அதன் பிறகு பணம் செலுத்தும் செயல் முறையும் எளிதாக காணப்படும். கார்டு மூலம் பணம் செலுத்த முடியாவிட்டால், டெலிவரியி வந்த பிறகு பணத்தைக் கொடுக்கலாம். அதுவும் எளிதானது.

ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள்02. பணம் மிச்சம்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது பணத்தைச் சேமிக்கும் முதல் விடயம், எமக்கு பொருட்களை எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவு கிடையாது.

அதாவது நாம் சென்று பொருட்களைப் கொள்வனவு செய்து கொண்டு வரும் போது, போகும் போது ஒரு செலவு, வரும் போது ஒரு செலவு அத்துடன் பெரிய பொருட்களை கொண்டு வந்தால் அதற்கான போக்குவரத்துக்கு என்று கூடுதல் செலவுகள் உள்ளன.

ஆனால் அப்படிப் பார்க்கும் போது, ஆன்லைன் மூலம் ​​நம் வீட்டிற்கு பொருட்களைக் கொண்டு வந்து தரும் ஒரு சேவையானது பொருளாதார ரீதியாக மிகவும் இலாபகரமானது.

ஆனால் நீங்கள் அந்த இலாபத்தை சரியாக பெற விரும்பினால், அவர்கள் டெலிவரிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள், டெலிவரி இலவசமா அல்லது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் உள்ளதா என்பதை நீங்கள் தேடிப்பார்க்க வேண்டும்.

இதைத் தவிர, பெரும்பாலான நேரங்களில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, ​​பல வேடிக்கையான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அவைகளின் மூலமும் நமக்கு பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.

அன்பளிப்பு, பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கும் வசதியானது03. அன்பளிப்பு, பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கும் வசதியானது

உண்மையில், இக்காலத்தில் அன்பளிப்பு, பரிசுப் பொருட்களை அனுப்புவதற்கு மிகவும் எளிதான வசதியான வழியென்றால் அது ஆன்லைன் ஷாப்பிங் தான். காரணம், உரிய பரிசை சம்பந்தப்பட்ட இடத்துக்கு எளிதாக அனுப்ப முடியும்.

பரிசுகளை வாங்குவதற்கு கடை கடையாக செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. கடையில் இருந்து பரிசுப் பொருட்களை வாங்கிய பிறகு அதனை டெலிவரி செய்வதற்கு டெலிவரி சேவையைக் தேடிக் கண்டுபிடிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை.

நேரடியாக பொருளை வாங்க வேண்டிய இணையதளத்திற்கு சென்று, விரும்பியபடி பரிசுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எப்படி பொதி செய்யப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்து, விரும்பினால் பரிசுப் பொருட்களுடன் உங்களின் குறிப்பையும் அனுப்பும் படி அமைக்கலாம்.

அந்தக் குறிப்பில் தனிப்பயனாக்கப்பட்ட செய்தியை எழுத விரும்பினால், அதையும் செய்யலாம். இதையெல்லாம் கணினி முன் அமர்ந்து சில நிமிடங்களில் செய்துவிடலாம் என்பது மிகப் பெரிய விடயமல்லவா? மேலும், இந்த வழியில் எந்த தூரப் பிரதேசத்திற்கும் பரிசுகளை அனுப்புவது எளிதாக உள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் 04. விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இது உண்மையில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு யுக்தியாகும். அதாவது, எதையாவது வாங்குவதற்கு முன் அதன் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது.

இப்போது நீங்கள் கடையில் ஒரு ஜோடி காலணிகளை வாங்கச் சென்றீர்கள் என்றால் நாங்கள் செல்லும் முதல் கடையிலேயே அதை வாங்குவது இல்லை. மாறாக அதன் விலைகளை கேட்டறிந்த பின்னர் சற்று பார்த்து விட்டு வருகின்றோம் என்று கூறி விட்டு பக்கத்து கடைக்குச் சென்று அந்த காலணிகளின் விலையை விசாரித்து அறிந்து கொள்கின்றோம், இவ்வாறு பல கடைகளில் விலையை கேட்டறிந்து, அதன் டிசைன்கள் மற்றும் தரத்தை பார்த்து அதில் சிறந்ததை, இலாபகரமானதை வாங்கிக் கொள்கின்கின்றோம்.

இப்போது, ​​ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போதும், ​​அதையே மிக எளிதாகச் செய்யலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்கக்கூடிய ஆன்லைன் கடைகளை தேடிப் பார்க்க வேண்டும். இதை கூகுள் தேடலில் கூட எளிதாக செய்துவிடலாம்.

அடுத்து அந்த தளங்களில் குறிப்பிட்ட பொருளுக்கான உத்தரவாதம் எப்படி, முகவர் உத்தரவாதம் என்ன, தயாரிப்பின் தரம், நம்பகத்தன்மை மற்றும் விலைகளை தேடிப் பார்த்து அவைகளை ஒப்பிட்டு பார்ததும் எமக்கு பிடித்த பொருளை சரியான விலைக்கு இலாபகரமாக உள்ளதை கொள்வனவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் 05. போட்டி மிக்க தள்ளுபடிகள்

மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடி கதையை தனியாக எடுத்துப் பார்த்தாலும், ஆன்லைன் ஷாப்பிங்கில் இது ஒரு நல்ல அனுகூலமான விடயமாக காணப்படுகின்றது.

ஏனெனில் இன்று ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மற்றும் ஆன்லைன் வணிகங்கள் பெருமளவில் இருப்பதால், ஒருவரையொருவர் முந்திக் கொண்டு தள்ளுபடிகளைக் கொடுக்க முயற்சிக்கின்றனர். இந்த சந்தர்பங்களை வாடிக்கையாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், பெரும்பாலும், இந்த ஆன்லைன் வணிகங்களில் உள்ள போட்டியின் காரணமாக, அவர்கள் பொருட்களுக்கான தள்ளுபடி மற்றுமன்றி டெலிவரியை இலவசமாக வழங்குவதற்கும் முயற்சிக்கின்றனர். அவ்வாறான சந்தர்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலாபம் தான்.

அதனால் மேலே சொன்னது போல் முதலில் விலைகளை, தரத்தை ஒப்பிட்டுப் பார்த்து பொருட்களை வாங்குங்கள் என்று நாம் சொல்கிறோம்.

ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் 06. தொல்லை தந்து நச்சரிக்கும் விற்பனையாளர்கள் இல்லை

இது எல்லா இடத்திற்கும் பொருந்தமானது கிடையாது. எனினும் சில சமயங்களில் கடைக்கு சென்ற பிறகு நாங்கள் கடையில் இருந்து வெளியே வருவது கடும் கோபத்துடன் தான். காரணம் அங்குள்ள சில சேல்ஸ்மன் கள்தான்.

சில போது அவர்கள் எம்மை மதிக்க மாட்டார்கள், எமக்கு தேவையான பொருட்கள் இருக்கின்றதா இல்லையா என்று கூட சொல்ல மாட்டார்கள். உனக்கு தேவையாயின் கடை முழுதும் தேடிப்பார்த்து விருப்பம் என்றால் வாங்கிட்டு போ என்று தான் செயல்படுவார்கள்.

அதே போல் சேல்ஸ் செய்யும் இன்னொரு கூட்டம் இருக்கிறார்கள் அவர்கள் தான் அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் என்று சொல்லி சொல்லியே பொருட்களை எமது தலையில் கட்டுவதற்கு தொல்லை கொடுக்கும் தொல்லைவாதிகள். இவர்களின் இந்த நச்சரிப்பால் எமக்கு அவசியமில்லாத பொருட்களையும் சில நேரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது உங்களுக்கு இவ்வாறான எந்தப் பிரச்சனையும் இல்லை. அவசியமான பொருள் இருக்கின்றதா? இருக்கும் என்றால், விலை, தரம், எல்லாம் செட் ஆகுதா? வாங்கிட்டு போய்கிட்டே இருக்கலாம்.

ஆன்லைன் ஷாப்பிங்கின் நன்மைகள் 07. திருட்டுத்தனமாகவும் எடுத்துக்கொள்ளலாம்

இல்லை, இல்லை இங்கு சொல்லப் போவது திருட்டுத்தனமாக பொருட்களை களவாடுவதைப் பற்றியல்ல.

உண்மையில் உங்களுக்கு யாருக்காவது Surprise Gift ஒன்றை கொடுப்பதற்கு அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக பரிசுப் பொருட்களை வாங்க வேண்டி ஏற்பட்டால் கடைக்குச் சென்று பரிசுப் பொருட்களை வாங்குவதை விட ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் எளிதானது.

அப்புறம் முன்பு போல் மனைவிக்கு Surprise Gift ஒன்றை கொடுப்பதற்கு நினைத்தால் திருட்டுத்தனமாக கடையில் இருந்து கொண்டு வந்து வீட்டில் உள்ள கேரேஜ் மூலையில் மறைத்து வைத்து தின்டாடத் தேவையில்லை. மனைவியின் அலுவலகத்திற்கு நேரடியாகவே டெலிவரி செய்யலாம். ஜஸ்ட் மிகவும் சிம்ள் ப்ளான்ல.

அது சரி… இப்போது ஆன்லைன் ஷாப்பிங்கில் எந்தவித குறைகளோ அல்லது பாதகமோ இல்லையா? நாம் அப்படி சொல்லவில்லை. எல்லாவற்றையும் போலவே, ஆன்லைன் ஷாப்பிங்கிலும் சிக்கலான விடயங்கள் பிரச்சனைகள் உள்ளது. ஆனால், அந்த எல்லா பிரச்சனைகளும் தான் மிகக் கவனத்துடன் நடந்து கொண்டால் தீர்க்க முடியுமான சிக்கல்கள் தான்.

– Reezah Jesmin

Facebook | WhatsApp | SARINIGAR contact

Leave a Reply

error: Content is protected !!