ஆண் பாவம்………….!

ஆண் பாவம்
“அத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
”ஆண் குட்டிதான்டி பொறந்திருக்கான்”
“அப்பாடாஹ்.. இப்பதான்டிமா நிம்மதியாக இருக்கு” (எதுக்கு?? ஒரு அடிமை சிக்கி விட்டான்ன்னா)

”அடடடே ஆண் பிள்ளையா போயிட்டு போகுது ஆத்தா இரண்டு பொட்டப்புள்ள இருக்குதுன்னு நெனச்சேன் இதாவது ஆண் குழந்தையா பொறந்துச்சே”

நீங்கள் ஹைடெக் சிட்டில வாழ்பவராக இருந்தால் இந்த வாசகம் எல்லாம் உங்களது காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை….

ஆனால் இன்றும் அதிகப்படியாக பரிமாறப்படும் வசனங்கள் தான் இவை… ஒரு குழந்தை பிறந்து விட்டால் அது பெண் குழந்தையாக இருக்க கூடாது என்பது இவர்களின் முதன்மை எண்ணம்…

பொட்டப் புள்ளையா பொறந்தா எந்தளவு நல்லம்ன்னு இவுகளுக்கென்ன தெரியும். அப்பாவோடது அண்ணாவோடது தம்பியோடது  என அத்தனைச் சொத்துக்களிலும் பங்கு வந்துருமுல்ல? பல அம்மாக்கள் கரண்டியில் சுரண்டியாவது கொடுத்திடமாட்டாங்..

எப்ப எங்க பிள்ளைப் பிறந்தாலும் முதல் கேள்வி ஆணா? ஏன் எல்லா இடத்திலேயும் ஆணா? ஆணா? என்று கேட்கிறார்கள்? அதன் இரகசியம் அறிந்தால் ஆணா பிறப்பதற்கு ஆசையா இல்லையா என்பது தெரியும்…  நல்லவேளை, எதுவாக பிறக்கனும் என்பது நம்மிடத்தில் இல்லை..

காதிர் இப்னு உபைத்  (رضي الله عنه) அறிவிக்கின்றார்கள்: ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அது ஆணா அல்லது பெண்ணா என்று கேட்க மாட்டார்கள். மாறாக, அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா என்றே நலம் விசாரிப்பார்கள். ஆம் என்று அவர்கள் பதில் சொன்னால், அல்ஹம்துலில்லாஹி ரப்பி ஆலமீன் என்று கூறுவார்கள் (ஸஹீஹ் புகாரி )

விடயத்திற்க்கு வருவோம். ஆணானப்பட்டவர்கள் அனைவருமே முதலில் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். (ஒரு சிலரைத் தவிர எங்களைப் போல்) ஆண் மகனாகப் பிறப்பது என்பது அடுத்தவர்களுக்கு வேண்டு எனில் மகிழ்சியாக இருக்கலாம்.

ஆனால்  பல ஆண்களுக்குள் இருக்கும் மனநிலை ஏண்டா ஆணாய் பிறந்தோம்மென்று… (சிலருக்குள் இல்லாமலும் இருக்கும்) ..

ஆண்கள் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு…. (சிலரைத்தவிர) ஏனென்றால்?

ஆண் என்பவன் அதிகராம், ஆதிக்கம் செய்பவன், ஆணவம் கொண்டவன் என்றெல்லாம் சொல்லி சொல்லியே ஆண்கள் எல்லாம் பெண்களை அடக்கக் கூடியவர்களாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது நமது சமூகம்!  இருக்கலாம், அது இருந்துவிட்டு போகட்டும்.

அதை மீறிய செயல்கள் அவர்களிடத்தில் இருக்கின்றது.  கணவனாக! தந்தையாக! மகனாக! ஒரு ஆண் எத்தனை பொறுப்புகளை வகிக்க வேண்டி இருக்கின்றது? எத்தனை கஷ்டங்கள், சிரமங்கள், சங்கடங்கள் துயரங்கள் என்று படவேண்டியிருகின்றது? உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அது போல் தான் ஆண்களின் நிலையும்…

ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதும் ஆண் குழந்தை வேண்டும் ஆண் குழந்தை வேண்டும் என்று வேண்டி உருகுவதும் எதற்கு? அவர்களை தனி கவனம் செலுத்தி வளர்ப்பது எதற்கு? தமது மகனை சீரும் சிறப்புமாக கேட்பது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து தங்கள் அருகில் இல்லாவிடினும் கடனையாவது வாங்கி மகனை நல்லபடியாக படிக்க வைத்து வெளிநாட்டில் வேலைக்கு போவதற்கு உதவியும் செய்து ஆளாக்கி விடுகிறாங்களே… அது எதற்கு?

அவன் எது வேண்டும் என்றாலும் செய்யட்டும் எல்லாம் பெரியவனானதும் அது சரியாகிவிடும்.. ஆஹா ஓஹோன்னு  அளவு கடந்த செல்லமா வளர்ப்பார்களே….அது எதற்கு? ஆட்ட ஆசை ஆசையா எதுக்கு புல்லு புண்ணாக்கு (ஓ அது மாட்டுக்கு தானே சரி சரி) இலை, தழை பால் பலகாரம் என்று கொடுத்து கொடுத்து வளர்ப்பார்களே.. (இத நான் சொல்லித் தான் தெரியனுமாக்கும்..) பின்னால் அவர்களை வலுவிலக்கச் செய்வதற்காகவா? அவர்களை சுயமாக சிந்திக்கவிடாமல் தடுப்பதற்காகவா? இல்லை அவன் உடல், பொருள் அனைத்தையும் இழந்து பித்துப் பிடித்து அலைவதற்காவா?

தவறு இல்லை தான்! பெற்ற மகன், அனைத்திற்கும் தங்களை சார்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுவதிலும் தவறில்லை! அதேசமயம் அவனுக்கென்று ஒருமனம் இருப்பதை ஏன் அறிய தவறுகின்றார்கள்? அதில் ஆசைகள், ஏக்கங்கள் தனிப்பட்ட சில விடயங்கள் இருப்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள்?

தான் பெற்ற குழந்தைகளிடம் தங்களுக்கு இல்லாத உரிமையா என்றெல்லாம் கேட்கக் கூடாது! இருக்கின்றது… எல்லாம் ஒரு எல்லைக்குள் தான்!!!! நீங்கள் பெற்றதாகவே இருக்கட்டும்! அதற்காக அவர்களது விருப்பங்கள், ஆசைகள், எண்ணங்கள் எல்லாம் என்னவாவது?

திருமணம் ஆகும் வரை ஒரு ஆண் தன் மகனாக இருக்கின்றான். ஆன பின்பு அவனுடைய கடமை இன்னும் கூடுகின்றது, இன்னொரு பெண்ணுக்கும், அவள் மூலம் பிறக்கும் அவனது பிள்ளைகளுக்கும் அவன் பொறுப்பாளி ஆகின்றான்.

மகனாக இருக்கும் போது அவன் செய்யும் சேட்டை, குழப்படி, தவறு, குற்றம், அனைத்தும் செல்லமாக தெரியும் அவனது குடும்பத்திற்கு, அவன் திருமணம் ஆனதும் யதார்த்தமாக, வாய் தவறி ஒரே ஒரு சொல்லை சொல்லி விட்டாலும் கொலை குற்றம் செய்தது போல் தண்டிக்கப்படுகிறான்!

பல குடும்பங்களில் தன் மனைவியிடமிருந்து சிறந்த கணவனுக்கான பெரும் மதிப்பு மிக்க நற்சான்றிதழை வாங்க முடியாததற்கு இந்த சூழ்நிலையே முக்கிய காரணமாக இருக்கின்றது.!

மனைவியை சமாளித்து சமாதானப்படுத்தி விடலாம் என்று தெரியும் ஆணுக்கு நன்றாகவே தெரியும் தனது அம்மா, சகோதரிகளின் வசையிலிருந்து தப்பவே முடியாது என்று! மனைவி மட்டும் வழங்கும் நற்சான்றிதழா அது?

நபி (ﷺ) அவர்கள் ‘உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே’ என்று ஓர் ஆணுக்கு சொன்ன தகுதியல்லவா அது?

வாரி வாரி வருடம் முழுவதும் அயராமல் அனுப்பியவன் அவசரத்திற்கு ஒரு மாதம் அனுப்பத் தவறினாலும் அல்லோல் படுத்தபடுகின்றான். இதைவிடக் கொடுமை, இரு மகன்கள் பிறக்கும் வீடுகளில் நடப்பது தான்! ஒரு கண்ணில் பால், மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதைப் போல் கொடுக்கும் மகன் நடு வீட்டில் இருப்பான், கொஞ்சம் கொடுக்க இயலாத மகன் நடுத்தெருவில் இருப்பான்!

ஒரு மகனை மட்டும் தாங்கோ தாங்கென்று தாங்கும் தாய் இன்னொரு மகனை ஏறேடுத்தும் பார்க்க மறுக்கின்றது!  அப்படியே பார்த்தாலும் அது ஊருக்காக! சமூகத்திற்காக! யாரும் எதுவும் சொல்லி விடுவார்களோ? போனால் போகட்டும் அதுவும் என் பிள்ளை தான் என்கின்றார்கள்.

யார் எது சொன்ன போதும்  தாங்கிக் கொள்ளும் ஒரு மகனால் தன் தாயே தன்னை மட்டம் தட்டும் போது கூனிக் குறுகின்றான். சில பெற்றோர்கள் வசதியான மகனின் வீட்டில் தங்குவதை தான் விரும்புகிறார்கள்…

இன்னொரு மகன் வசதியில்லாத ஏழை என்ற காரணத்தால் விட்டு ஒதுக்கி விடுவார்கள்! (ஏன் இன்னும் சுமையை கொடுக்கனும் என்ற உண்மையான நோக்கம் எனில் அல்லாஹ் அதற்கு நற்கூலி கொடுக்கட்டும்!) வசதி ஒன்றை மட்டுமே குறிகோளாகக் கொண்டு வசதியற்ற மகனை ஒதுக்கும் போது வசதியற்றவனுக்கு தன் சகோதரன் மேல் வெறுப்பைத் தான் உண்டாகும்! அந்த வெறுப்பு பொறாமையை உண்டாக்கி குடும்பத்திற்குள், உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தி வைக்கும்!

நாயகம் (ﷺ) அவர்கள் கூறினார்கள், “உங்கள் குழந்தைகள் உங்களை கௌரவப்படுத்த வேண்டும் என்பது உங்களது உரிமையாக இருப்பது போல, தாங்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பது உங்களது குழந்தைகளின் உரிமையாகும்” (அபூதாவுத்)

சில வீடுகளில் இன்னும் மோசம். எவ்வளவு கொடுத்தாலும், செய்தாலும் இல்லை என்றே தூற்றுவார்கள்! அவன் என்னத்தை செய்தான்? ஏதோ கொஞ்சம் கொடுத் தான் என குறைபடுபவர்கள்!

மகனுக்கு மணமுடித்து மருமகள் வந்த பின்பு  தன் மகளுக்கு (மகளை கட்டிக் கொடுத்து விட்டாலும்) தன் மகனிடமிருந்து வரும் பணம் மற்றும் பொருள்களில் முக்கால் பங்கை தன் மகளுக்கு என்று ஒதுக்கி விட்டு மீதியுள்ள கால் பங்கில் குடும்பத்திற்க்கே பங்கிடுகின்றார்கள்.

இதனாலேயே பல குடும்பங்களில் சச்சரவுகள் ஏற்பட்டு பகையாளியாகி உள்ளுக்குள் புகைந்து கொண்டு வெளியில் சமாளித்த ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்க்கிறார்கள்.

திருமணம் முடிந்து வெளிநாடு சென்று மாதா மாதம் பணம் அனுப்பும் போது முதல் மாதம் ஓகே… அடுத்தடுத்த மாதங்களில்  “சரி இப்படியே போனா எப்படிங்க? எங்களுக்கும் தனியா வேறயா அனுப்புங்க” என்று சிணுங்கிய குரல் ஆரம்பிக்கும். அங்கிருந்து ஆரம்பித்து விடும் இந்த மத்தளத்துக்கு ரெண்டு பக்க இடி அது போல்…

பாவம் மனைவிக்கு அனுப்பவில்லை எனில் மனைவிக்கிட்ட திட்டு! மனைவிக்கு அனுப்பினா “போன தடவ வௌிநாட்டிற்கு போயிருந்த போது நல்லாதான் இருந்தான் ஆனா இந்த தடவ ஏனோ இப்படியி இருக்கான்! மாத்திபுட்டாள்ம்மா மாத்திபுட்டாள்….அவன மயக்கி அவள் முந்தானையில முடிஞ்சிட்டா… அவள் தான் முடிஞ்சான்னா இவனுக்கு எங்கே போச்சி புத்தி… ஆக கடைசியில் சுத்தி சுத்தி ஆணின் தலையில் வந்து விழும் சுத்தி.
(டங்குன்னு ஏதாவது சத்தம் கேட்குதா?)

ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து அவனை தங்களிடமே வைத்துக் கொண்டு அவனின் உழைப்பு, சம்பாத்தியம்… மற்றும் அவனின் தேவைகள் அனைத்தும் தங்களுடனே இருக்க விரும்பும் பெற்றோர்களுக்கு!…

வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கி வெளிநாடோ அல்லது உள்நாட்டிலோ உழைப்பதற்கு, சம்பாதிப்பதற்கு வழியும் தேடிக் கொடுத்து விடும் நீங்கள். அவனுக்கு திருமணம் என்ற ஒன்றை மட்டும் செய்யது விடாதீர்கள்.

(அஸ்தஃபிருல்லாஹ்… அப்புறம் வழி தவறிப் போய் விட்டான் என்றெல்லாம் குற்றம் சொல்லி ஒப்பாரி வைக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்).

ஏனெனில் அது உங்களுக்கும் உங்களது மகனுக்கும் இடைவெளியை ஏற்படுத்துகின்றது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதற்காக சொல்கின்றேன் திருமணம் செய்யாதீர்கள் என்று)

ஒரு குழந்தையை பெற்றெடுத்தால் மட்டும் போதாது அதற்குண்டான தேவைகளை நிறைவேற்றத் தான் இறைவன் தாயாக தந்தையாக பெற்றோரைப் படைத்துள்ளான்.

நாம் செய்த செய்யும் அத்தனைக்கும் பிள்ளைகளிடம் கைமாறு எதிர்பார்த்தால் எப்படி? நாம் வளர்க்கும் நமது குழந்தைகள் நமக்கு நல்லது செய்ய நினைக்கும் ஆனால் நம்முடைய சில செய்கைகள், நடவடிக்கைகள் அதனை தடுக்கவும் வழி வகுக்கும் என்பதை மறக்காதீர்கள்!

இறுதித்தூதர்  (ﷺ) மேலும் கூறினார்கள், “உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் நீதியை கடைபிடியுங்கள்”, இதனை மூன்று முறை திரும்பத் திரும்ப சொன்னார்கள் (முஸ்லிம்)

ஆண்… அவன் குடும்பத்தை தாங்கும் அரண். அவனை ஆட்டம் காணவைத்து விட்டு மொத்தக் குடும்பமே பூகம்பம் வந்து விட்டது போல் ஆ(ட்)டிவிடாதீர்கள்.. ஹேய்… பெண்களே உங்களைத் தான்! நீங்கள் தாயாக மனைவியாக அல்லது மகளாக எதுவாக இருக்கும் பட்ஷத்தில் ஆண் என்ற அன்புக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அணுசரனையாகவாவது நடந்துக்கொள்ளுங்கள்.

(என்னது அடைக்கலம் கூட இல்லையா? ஏண்டா இந்த பொறப்பு பொலம்புவதும், குமுறுவதும் கேட்குது ஹா ஹா)… நாம் எல்லாம் ஆறுதலாக இருக்க கூடியவர்கள் தானே… அவ்வாறு தானே இறைவனும் மனைவிக்கான கடமையாக அல்-குர்ஆனில் கூறியுள்ளான்?

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; (அல்குர்ஆன் 30:21)

உழைப்பதும், சம்பாதிப்பதும் அதனை தன் குடும்பத்திற்காக செலவு செய்வதும் ஓர் ஆணின் கட்டாயக் கடமை! அதிலிருந்து அந்த ஆண் தவறி விடுவானேயால் நாளை மறுமையில் இறைவனிடத்தில் குற்றம் அவனைச் சார்ந்ததே!

வசதியாக இருக்கும் தன் மகனை ஒரு மாதிரியாகவும் வசதியற்ற மகனை இன்னொரு மாதிரியாகவும் பார்ப்பது பெற்றோர்களுக்கு ஆகுமான செயல் அல்ல. இறைவனிடத்தில் கட்டாயம் பதில் சொல்ல வேண்டி வரும்.

அதே போல் பாகுபாடு பார்த்து குடும்பச் சொத்துகளிலும் ஏமாற்றுவது பெரும்பாலான இடங்களில் நடைபெறுகின்றது. உண்மையான அன்போடு, அக்கரையோடு, பாசத்தோடு பெற்று வளர்த்து இருப்பார்களேயானால் அப்படி செய்யமாட்டார்கள். தான் பெற்ற பிள்ளைகளுக்கே துரோகம் இழைக்க மாட்டார்கள்.

நுமான் இப்னு பஷீர்  (رضي الله عنه) அறிவிக்கின்றார்கள், “என் தந்தை, அவருடைய செல்வத்தில் இருந்து எனக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள். ஆனால் என் தாயார் அம்ரா பின்த் ரவாஹாவோ ‘நாயகம் (ﷺ) அவர்கள் இதற்கு சாட்சியாக இருக்கும் வரை இதனை நான் அங்கீகரிக்க, உடன்பட மாட்டேன்” என்று கூறிவிட்டார். அதனால், என் தந்தை நாயகம் (ﷺ) அவர்களிடம் சென்று அந்த பரிசுப் பொருளுக்கு சாட்சியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அப்போது இறைத்தூதர் (ﷺ) அவர்கள் ‘இது போலவே உங்களின் ஏனைய பிள்ளைகளுக்கும் செய்தீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு ‘இல்லை’ என்று என் தந்தை பதிலளித்தார். ‘அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீதியை பேணுங்கள்’ என்று இறுதித்தூதர் (ﷺ) கூற, என் தந்தை திரும்பி வந்து எனக்கு கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டார்கள்” (புகாரி, முஸ்லிம்)

அன்புள்ள குடும்பமே உங்கள் பிள்ளை தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் உங்களைப் போன்ற ஒரு ஜீவனுக்கும் அவன் உறவான பின் நீங்கள் எப்படி உங்கள் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பீர்களோ? அப்படியே அவளும் உங்கள் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பாள் என்பதை உணர்ந்தீர்கள் என்றால்… ஆண் ஆணாக அன்பானவனாக பொறுப்புமிக்கவனாக இருப்பான்.

இல்லையென்றால்….. அதை நான் வேறு சொல்ல வேண்டுமா. அந்தர்பல்டி அடிப்பான். பொய் வேஷம் போடுவான். குரங்காட்டியிடம் மாட்டிக் கொண்ட குரங்கு போல் ஆவான். சிடுமூஞ்சியாவன்  சின்னச் சின்னப் பிரச்சனைக்கும் எறிந்து விழுவான். ஆக மொத்ததில் ஆண் பாவமாவான்..

ஆண்பாவம் பொல்லாததுமா.. இது நான் சொல்லல பின்னாடியிருந்து சொல்லச் சொல்றங்கமா.. ஹா ஹா

ஆணுக்கும் ஒரு மனமுண்டு – அதில்
ஆத்மார்த்தங்கள் பல அடங்கிக் கிடப்பதுண்டு.

அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை.

Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!